‘போடாக்ஸ் என்பது வயாகராவை விட சிறந்தது’ என்று விளம்பரப்படுத்தப்படும் ஒரு புதுமையான ‘முதுமையை தடுக்கும்’ சிகிச்சை, மருத்துவ நிபுணர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிகிச்சையால் இதய பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் கூட வரலாம் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
பெப்டைட் தெரபி என்பது மாத்திரைகளாகவோ அல்லது சுயமாக ஊசி போட்டுக்கொள்ளும் வடிவத்திலோ கிடைக்கிறது. தசை வளர்ச்சி, அதிக ஆற்றல் மற்றும் மனத்திறன் மேம்பாடு போன்ற காரணங்களுக்காக, நடுத்தர வயது ஆண்களிடையே இது வேகமாக பிரபலமடைந்து வருகிறது. ஒரு காலத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்கட்டமைப்பாளர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த ஊசி தற்போது பிரபலங்களின் விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் வைரல் காரணமாக பொதுமக்களிடையே பரவலாகியுள்ளது.
ஊசி போட்டால் இளமையாக மாறிவிடலாம் என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். சில பெப்டைட்களுக்கு மருத்துவ பயன் இருந்தாலும், ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் முறையற்ற கலவைகள் பெரும் ஆபத்து என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
பெப்டைட்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன. இதை பயனர்கள் ‘மூளைக்கான வயாகரா’ என்று வர்ணிக்கின்றனர்.
PT‑141 என்ற ஒரு கலவை, முதலில் பாலியல் குறைபாடுகளுக்காக உருவாக்கப்பட்டது. இது விறைப்புத்தன்மை குறைபாடு மருந்துகளுக்கு மாற்றாக விளம்பரப்படுத்தப்படுகிறது. இது இரத்த ஓட்டத்தை பாதிக்காமல் பாலியல் ஆசையை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை தற்போது இளமையான தோற்றத்திற்காக பலர் பயன்படுத்துவதால் பெரும் ஆபத்து எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது.
வேகமாக விரிவடைந்து வரும் பெப்டைட் சந்தையை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையான சட்டங்கள் வகுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தற்போது அதிகரித்து வருகின்றன. இந்த மருந்துகளை பயன்படுத்துபவர்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு அதிகரிப்பதால், இதய பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. குமட்டல், தலைச்சுற்றல், வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகள் போன்ற பிற சாத்தியமான பக்கவிளைவுகளும் ஏற்படலாம்.