ஒரு கட்டுமான ஒப்பந்ததாரரை, காதல் வலையில் சிக்கவைத்து, அவரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மிரட்டி பறிக்க முயன்ற வழக்கில், 10 மாதங்களாக தலைமறைவாக இருந்த சமூக வலைதள பிரபல பெண், கீர்த்தி படேல், அகமதாபாத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் 13 லட்சம் ஃபாலோயர்களை கொண்ட கீர்த்தி படேல் மீது, கடந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி சூரத் நகரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உடனே நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.
காவல்துறையின் தகவல்படி, “கீர்த்தி படேல், சூரத்தை சேர்ந்த ஒரு கட்டுமான ஒப்பந்ததாரரை காதல் வலையில் சிக்கவைத்து, பின்னர் மிரட்டி, கோடிக்கணக்கில் பணம் கேட்டுள்ளார். இந்த வழக்கில், முதல் தகவல் அறிக்கையில் பெயரிடப்பட்ட மேலும் நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கீர்த்தி மட்டும் தலைமறைவானார்.
கீர்த்தி படேல் தனது செல்போனில் வெவ்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வெவ்வேறு நகரங்களில் வசித்து போலீசாரிடமிருந்து தப்பித்து வந்துள்ளார். இந்த நிலையில் கிட்டத்தட்ட 10 மாத தேடுதலுக்கு பிறகு, அகமதாபாத்தின் சர்க்கேஜ் பகுதியில் அவர் இருப்பதை காவல்துறை கண்டறிந்தது. சூரத் போலீஸார், அகமதாபாத் போலீசாரின் உதவியுடன் நேற்று அவரை கைது செய்தனர்.
“கடந்த 10 மாதங்களாக கீர்த்தி படேலை கண்டுபிடிக்க முயன்று வந்தோம். எங்கள் தொழில்நுட்ப குழு மற்றும் சைபர் நிபுணர்களின் உதவியுடன், அகமதாபாத்தின் சர்க்கேஜில் அவரது இருப்பிடத்தை நாங்கள் கண்டுபிடித்தோம். அவர் ஹனி டிராப் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார். இந்த 10 மாதங்களில், குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது இருப்பிடம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தது. அவரது ஐபி முகவரி, தொலைபேசி எண்கள் மற்றும் சிம் கார்டுகள் என அனைத்தும் மாறிக்கொண்டே இருந்தன. அவரது இருப்பிடத்தை கண்டறிய இன்ஸ்டாகிராம் நிறுவனத்துடனும் நாங்கள் இணைந்து செயல்பட்டோம்,” என்று காவல் துணை ஆணையர் அலோக் குமார் தெரிவித்தார்.
“கீர்த்தி படேல் மீது நில அபகரிப்பு மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் உட்படப் பல புகார்களும் உள்ளன. இந்தப் புகார்களிலும் அவரது வாக்குமூலங்களை பதிவு செய்து, மேலதிக விசாரணை நடத்துவோம்,” என்றும் அவர் கூறினார்.
மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சிகளை எதிர்கொண்டால், பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையங்களுக்கோ அல்லது உயர் அதிகாரிகளின் அலுவலகங்களுக்கோ சென்று புகார் அளிக்குமாறு அலோக் குமார் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்திக்கு நெட்டிசன்கள் ‘காதல்’ என்ற புனிதமான விஷயத்தை மோசடியாக பயன்படுத்தும் இவர் போன்ற பெண்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்னும் ஒருசிலர் காமெடியாக ‘அடிடா அவளை.. உதைடா அவளை’ என்ற பாடல் இவர் போன்ற பெண்களுக்கு பொருந்தும் என்றும் பதிவு செய்துள்ளனர்