சட்டி சுட்டதடா.. கைவிட்டதடா.. விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக.. கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா? காங்கிரஸ், பாமக மட்டும் வெற்றிக்கு போதுமா? ஸ்டாலின் குழப்பம்..!

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உறுதியாக இருந்த திமுக கூட்டணி, 2026 சட்டமன்ற தேர்தலில் சுக்குநூறாக நொறுங்கிவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தனர். அதுபோலவே, தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும்…

EPS vs Stalin

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உறுதியாக இருந்த திமுக கூட்டணி, 2026 சட்டமன்ற தேர்தலில் சுக்குநூறாக நொறுங்கிவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தனர். அதுபோலவே, தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேற அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் திமுக தலைமை கலக்கத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2026 ஆம் ஆண்டு தேர்தலை பொறுத்தவரை, எத்தனை தொகுதிகள் கேட்பது என்பதை விட, “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்பதுதான் கூட்டணி கட்சிகளின் முக்கிய கோரிக்கையாக உருவெடுத்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் வெறும் ஆறு தொகுதிகள் மட்டுமே பெற்ற விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுக ஆகியவை இனி ஆறு தொகுதிகளுக்கு உடன்படாது என்றும், குறைந்தது 12 தொகுதிகள் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதுமட்டுமின்றி, ஆட்சியில் பங்கு என்ற குரலையும் வெளிப்படையாக எழுப்பி வருவது, திமுக தலைமைக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை, அதிமுக ஆட்சி அமைத்தாலும் அல்லது திமுக ஆட்சி அமைத்தாலும், கூட்டணி கட்சிகளுக்கு பதவி வழங்காமல், அதிகாரத்தை தாங்களே வைத்து கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, “கூட்டணி அரசு” என்பதை வெளிப்படையாகவே சொல்லி அதிமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தற்போது அதே குரலை வெளிப்படையாக எழுப்ப தொடங்கிவிட்டன. “கூட்டணி அரசுக்கு” ஒருபோதும் திமுக சம்மதிக்காது என்பதால், இந்தக் கட்சிகள் வெளியேறவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் மதிமுக வெளியேறிவிட்டால், வெறும் காங்கிரஸை மட்டும் வைத்துக்கொண்டு, பாமகவை உள்ளே இழுத்தால் வெற்றிக்குத்தேவையான வாக்கு சதவீதம் கிடைக்குமா என்பதும் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அதுமட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியும் உறுதியாக கூட்டணியில் இருக்கும் என்பதையும் 100 சதவீதம் சொல்ல முடியாது. இதனால் கூட்டணி தொடர்பான குழப்பங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எப்படியும் கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்தி, அந்த கட்சிகளை தக்கவைத்துக் கொள்வார் என்றும், அதை எப்படி செய்ய வேண்டும் என்ற ராஜதந்திரம் அவருக்குத் தெரியும் என்றும் திமுகவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில், இந்த தேர்தலில் சிறிய கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பதால், அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.