லண்டனில் நடந்த இந்தியா குளோபல் ஃபாரம் 2025 மாநாட்டில், இஸ்கான் துறவியான கௌரங்க தாஸ், கூகிள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையுடன் தனக்கு ஏற்பட்ட ஒரு சுவாரஸ்யமான சந்திப்பை பகிர்ந்துகொண்டார். அத்துடன், சமூக ஊடகங்களால் ஏற்படும் டிஜிட்டல் அடிமைத்தனம் மற்றும் மனநல பிரச்சினைகள் குறித்தும் தனது ஆழ்ந்த கவலைகளை பதிவு செய்தார்.
மாநாட்டின் இறுதி நாளில், தாஜ் செயின்ட் ஜேம்ஸ் கோர்ட்டில் பார்வையாளர்களிடையே பேசிய கௌரங்க தாஸ், தானும் சுந்தர் பிச்சையும் ஐஐடியில் ஒரே காலத்தில் படித்தோம். ஆனால், நான் ஐ.ஐ.டி. பம்பாயிலும், சுந்தர் பிச்சை ஐ.ஐ.டி. காரக்பூரிலும் படித்ததால், கல்லூரி காலத்தில் ஒருபோதும் நாங்கள் சந்தித்ததில்லை.
“பட்டப்படிப்பு முடிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் சந்தித்து கொண்டோம். அப்போது அவர் என்னைப் பார்த்து, ‘நீங்கள் என்னை விட இளமையாக இருக்கிறீர்களே’ என்று சொன்னார். அதற்கு தான், “நீங்கள் மன அழுத்தத்தை உருவாக்கும் கூகுளை கையாள்கிறீர்கள். நான் மன அழுத்தத்தை போக்கும் கடவுளை கையாள்கிறேன்,” என்று நகைச்சுவையுடன் பதிலளித்ததாக கூறினார்.
ஐ.ஐ.டி. பம்பாயில் பி.டெக் பட்டம் பெற்ற கௌரங்க தாஸ், தனது இளமையான தோற்றத்திற்கு, மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையே காரணம் என்று சொன்னார். இந்த லேசான தருணத்தை, சமூக ஊடகங்களால் ஏற்படும் தீவிரமான மன அழுத்த பிரச்சினைக்கு அவர் கவனத்தை திருப்ப பயன்படுத்திக் கொண்டார்.
“நமக்கு ஒரு பெரிய பிரச்சனை உள்ளது. உலகம் முழுவதும் 230 மில்லியன் மக்கள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகியுள்ளனர். இந்தியாவில் மட்டும் 70% இளைஞர்கள் தினமும் கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் ஆன்லைனில் செலவிடுகிறார்கள். உலகில் ஏழு பேரில் ஒருவர் மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.”
குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே, டிஜிட்டல் தளங்களின் அதிகப்படியான பயன்பாடு எப்படி பதட்டம், தனிமை மற்றும் டிஜிட்டல் அடிமைத்தனம் ஆகியவற்றை தூண்டுகிறது என்பதை கௌரங்க தாஸ் விரிவாக எடுத்துரைத்தார். இந்த விஷயத்தில் நமது இளைஞர்களின் எதிர்காலம் குறித்த அவரது கவலை நியாயமானதே என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த உலகம் கடவுள் பாதி , மிருகம் பாதி நிறைந்தது. சமூக ஊடகங்களை அதிகமாக கையாண்டால் மிருக புத்தியும், கடவுளை நோக்கி தியானம் செய்தால் மன நிம்மதியும் கிடைக்கும். எது வேண்டும் என்பதை இன்றைய இளைஞர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.