இஸ்ரேல்-ஈரான் போர் காட்சிகளை காபி ஷாப்களில் ரசித்து’ மக்கள் பார்க்கும் வகையில் முன்பதிவு செய்யப்படும் என்ற அறிவிப்பு மனிதம் செத்துவிட்டதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தற்போது மத்திய கிழக்கில் பதற்றம் உச்சக்கட்டத்தில் உள்ளது. ஜூன் 12 ஆம் தேதி முதல் இஸ்ரேலும் ஈரானும் தொடர்ந்து ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றன. இஸ்ரேல், ஈரானில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற நடவடிக்கையை தொடங்கியபோதுதான் இந்த மோதல் ஆரம்பித்தது. இதற்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், லெபனான் மற்றும் ஜோர்டானில் இருந்து வெளிவந்த சில வீடியோக்கள் இணையத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளன.
இன்ஸ்டாகிராமில் வைரலான ஒரு வீடியோவில், லெபனானில் உள்ள ஒரு காபி கஃபேயில் மக்கள் தங்கள் உணவை அப்படியே விட்டுவிட்டு, இரவு வானில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்த ஏவுகணை போரை காணவும், அதை பதிவு செய்யவும் ஆர்வம் காட்டுவதை காண முடிந்தது. சிலர் தாக்குதல் முடிந்ததும் கைதட்டினர். இவ்வளவு தீவிரமான சூழ்நிலையிலும், மக்கள் போட் காட்சியை ரசிப்பதாக தெரிந்தது.
இந்த விசித்திரமான செயல் மேலும் ஒருபடி மேலே சென்றுள்ளது. ஜோர்டானில் உள்ள ஒரு காபி கஃபே, வாடிக்கையாளர்களுக்கு உணவருந்திக்கொண்டே இரு நாடுகளுக்கும் இடையேயான ஏவுகணை பரிமாற்றத்தை வானத்தில் பார்க்க முன்பதிவுகளை வழங்குவதாக கூறப்படுகிறது. ‘அல்பாபா’ என்ற மத்திய கிழக்கு செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு வீடியோவில், சால்ட் சிட்டியில் உள்ள ஒரு ஜோர்டானிய கஃபே, விருந்தினர்கள் ஏவுகணை பரிமாற்றத்தை பார்க்க இருக்கைகளை முன்பதிவு செய்ய அனுமதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த வீடியோவில், மக்கள் உணவகத்தின் மொட்டை மாடியில் இருந்து காபி அருந்திக்கொண்டும், இரவு உணவு சாப்பிட்டு கொண்டும் ஏவுகணை போரைப் பார்த்தனர்.
இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இத்தகைய பதட்டமான சூழ்நிலையில் காபி கஃபேயின் இந்த நடவடிக்கையை மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ள பயனர்கள், “இது எந்த மாதிரியான முதலாளித்துவம்?”, “இது பைத்தியக்காரத்தனம். மக்கள் உயிர்கள் போவதை பார்த்து ரசிக்கிறார்கள். கடவுள் நம்மை மன்னிப்பாராக,” என்றும், “மனிதகுலத்திற்கு அவமானம். இப்போது மக்கள் ஒருவருக்கொருவர் மரணத்தை ரசிக்கிறார்கள்,” என்றும், “மனிதகுலம் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தாழ்வான நிலையை அடைகிறது,” என்றும் பதிவிட்டுள்ளனர்.
https://www.instagram.com/reel/DK_3K51P3gI/?utm_source=ig_web_button_share_sheet