தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் களம் மிக உக்கிரமான மோதல் களமாக மாறியுள்ளது. தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்கள், எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்களுக்கும், தவெக அரசுக்கு எதிராகப் பின்னணியில் நடத்தப்பட்டு வரும் அரசியல் சூழ்ச்சிகளுக்கும் சட்டமன்றத்திலேயே மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுத்துப் பேசினார். அவையில் அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அவரது பேச்சின் வேகம் மற்றும் ஆவேசம் அவையிலிருந்த ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினரையும் அதிரச் செய்தது.
குறிப்பாக, அரசுத் துறைகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் மக்கள் வரிப்பணம் சுரண்டப்படுவது குறித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், “பல டிபார்ட்மெண்ட்டலயும் மறுபடியும் சொல்றேன், இப்பவும் சொல்றேன்… மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட நாங்கள் தொட மாட்டோம், யாரையும் தொடவும் விடமாட்டோம்! அதையும் மீறி எவனாவது தொட்டால் அவங்களை நாங்க சும்மா விடமாட்டோம்! இதுக்கு முன்னாடி மக்கள் பணத்தைத் தொட்டவங்களையும் இந்த அரசாங்கம் நிச்சயம் சும்மா விடாது” என்று மிக ஆவேசமாக முழங்கினார். ஊழலுக்கு எதிரான முதலமைச்சரின் இந்த நேரடி எச்சரிக்கையைக் கேட்டதும், அவையிலிருந்த திமுக உறுப்பினர்கள் அனைவரும் கடுமையான ஆத்திரத்தில் தங்களது ஆசனங்களை விட்டு எழுந்து நின்று கூச்சலிட்டு அவையை முடக்க முயன்றனர்.
திமுகவினரின் தொடர் கூச்சல்களுக்கு மத்தியிலும் எவ்விதத் தயக்கமும் இன்றித் தனது உரையைத் தொடர்ந்த முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் பேசினார். “நமது அரசு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளால், முந்தைய ஆட்சியில் நடந்த ஒவ்வொரு ஊழலாக இப்போது வெளியே வரத் தொடங்கியுள்ளது; இதனால் இங்கே இருக்கிற நிறையப் பேர் தங்களின் வேஷம் கலைந்துவிடுமோ என்ற மரண பயத்தில் நடுங்கிப் போய்க் கிடக்கிறார்கள்” என்று சாடினார். மேலும், தவெக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பரப்பி வரும் புதிய வதந்திகளையும், அவதூறுகளையும் அவர் அம்பலப்படுத்தினார்.
சமீபகாலமாக அரசியல் வட்டாரத்தில் பரப்பப்பட்டு வரும் ஒரு குறிப்பிட்ட வதந்தியைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், “நம்ம மேல அவதூறு பரப்புறதுக்காக இப்போ புதுசா ஒரு வெப்பன் ஒண்ணு கொண்டு வந்திருக்காங்க; அது என்ன தெரியுமா? அவங்க தயவால தான் நம்ம ஆட்சி நடக்குதாம்” என்று நக்கலாகக் குறிப்பிட்டார். அதற்கு உடனே பதிலடி கொடுத்த அவர், “இந்தத் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த பேராதரவாலும், அவங்களோட தயவாலும் தான் இந்த ஆட்சி கம்பீரமாக நடந்துகிட்டு இருக்கு; மனசாட்சி உள்ள நல்ல சக்திகளின் ஆதரவால தான் இந்த ஆட்சி வெற்றிகரமாக ஓடிக்கிட்டு இருக்கு” என்று கூறி, தவெக அரசு யாருடைய தயவிலும் இயங்கவில்லை என்பதை ஆணித்தரமாகத் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், தவெக அரசுடன் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி திமுக நடத்தி வரும் அரசியல் நாடகத்தை அதிரடியாக உடைத்தார். “நாங்க தான் அவங்களை அனுப்பி வச்சோம், நாங்க தான் அனுப்பி வெச்சோம் அப்படின்னு சிலர் வெளில பெருமை பேசிக்கிறாங்களே… அப்படி அனுப்பி வச்சவங்களுக்குத் தானே நாங்க மினிஸ்ட்ரியில இடம் கொடுத்தோம்; அப்படி இடம் கொடுத்தால் உங்களுக்கு ஏன் இவ்வளவு கதறல், ஏன் இவ்வளவு கோபம்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தவெக அரசுக்கு ஆதரவளிப்பது தங்களின் சுயமாக எடுத்த முடிவு என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
கம்யூனிஸ்ட் கட்சிகளே சுயமாக எடுத்த முடிவு என்று தெளிவாகக் கூறியிருக்கும் போது, திமுகவினர் மட்டும் சுயம்புகழ் பாடிக்கொண்டு, “நாங்க தான் அனுப்பினோம், நாங்க தான் அனுப்பினோம்” என்று கூறுவதில் எங்கே உண்மை இருக்கிறது என்று முதலமைச்சர் விஜய் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். கூட்டணிக்குள்ளும், அரசுக்குள்ளும் குழப்பத்தை விளைவிக்க நினைத்த திமுகவின் சதியை, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திலேயே ஆதாரங்களுடன் போட்டுடைத்ததைக் கேட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் என்ன பேசுவதென்று தெரியாமல் பேரவையிலேயே அதிர்ச்சியில் உறைந்து போயினர். முதலமைச்சரின் இந்த அதிரடியான உரை, தற்போதைய தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய சலசலப்பையும், தவெக தொண்டர்களிடையே மாபெரும் எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
