தமிழகத்தின் சமகால அரசியல் பரப்பில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஏன் இன்னும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை என்ற கேள்வி தொடர்ந்து பிரதானமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஊடகங்கள் தங்களின் சுயலாபத்திற்காகவும், பரபரப்பிற்காகவுமே இந்த கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்புகின்றன என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. ஒரு புதிய அரசியல் கட்சி தலைவர் ஊடகங்களை சந்திப்பதுதான் ஜனநாயகம் என்று பேசும் இதே ஊடகங்கள், முதலில் தங்களின் நடுநிலைமையையும் நேர்மையையும் நிரூபிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. பத்திரிகை உலகம் இன்று உண்மையிலேயே நியாயமாகவும் நேர்மையாகவும் இயங்குகிறதா என்பதற்கு முதலில் யாராவது சான்றிதழ் கொடுக்க முடியுமா என்ற தார்மீக கேள்வி இங்கு மிக முக்கியமானது.
தங்களை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று பெருமையோடு அழைத்துக்கொள்ளும் ஊடகங்கள், தங்களின் சொந்த கரைகளை முதலில் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஊடகங்களிடம் நேர்மையும் பரிசுத்தமும் இல்லாத காரணத்தினால்தான், ஒரு மாநிலத்தின் முதலமைச்சரோ அல்லது முக்கிய அரசியல் தலைவர்களோ தங்களை ஏன் தள்ளி வைக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை. உண்மையை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை மறந்துவிட்டு, பரபரப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் மட்டுமே முதலீடாக கொண்டு இயங்கும் ஊடகங்களிடம், தங்கள் மீது எந்தக் கறையும் இல்லை என்று வாதிட காரணம் கிடையாது. அந்த அசுத்தமான மற்றும் பக்கச்சார்பான அணுகுமுறையை ஊடகங்கள் என்று தூக்கி போடுகிறார்களோ, அன்றுதான் மக்கள் தலைவர்கள் அவர்களை தேடி வருவார்கள்.
விஜய் ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்று கேள்வி கேட்பவர்கள், கடந்த காலங்களில் இதே ஊடகங்கள் அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும், குடும்ப விவகாரங்களையும் எப்படி கையாண்டன என்பதை சற்றே சிந்தித்து பார்க்க வேண்டும். அரசியல் நோக்கங்களுக்காக ஒரு தலைவரின் குடும்ப பின்னணியையும், தனிப்பட்ட விஷயங்களையும் டெல்லி வரை கொண்டு சென்று தேவையில்லாத வதந்திகளை பரப்பிய பெருமை இந்த ஊடகங்களுக்கு உண்டு. அப்படிப்பட்ட சூழலில், அவசியமில்லாமல் ஊடகங்களை சந்தித்து எதற்காக பேச வேண்டும் என்ற கேள்வி நியாயமானதுதான். கேப்டன் விஜயகாந்த் போன்ற மாபெரும் மக்கள் தலைவரை இந்த ஊடகங்கள் எப்படித் தங்களின் கேலிச் சித்திரங்களாலும், உள்நோக்கம் கொண்ட கேள்விகளாலும் கையாண்டன என்பதை தமிழக மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.
விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கையில் ஊடகங்கள் ஆடிய ஆட்டத்தை மிக அருகிலிருந்து பார்த்த அனுபவம் தமிழக மக்களுக்கு உண்டு. ஒரு தலைவர் மக்கள் நலனுக்காக எதார்த்தமாக பேசும் ஒரு வார்த்தையை, தங்களுக்கு சாதகமாக கட் செய்து, எடிட்டிங் செய்து, முற்றிலும் வேறு ஒரு தவறான அர்த்தத்தில் ஒளிபரப்புவதுதான் இன்றைய பல ஊடகங்களின் பிரதான வேலையாக இருக்கிறது. தங்களின் சுய லாபத்திற்காகவும், டிஆர்பி ரேட்டிங்கிற்காகவும் ஒரு தலைவரின் பிம்பத்தையே சிதைக்க துணியும் பணத்தாசை பிடித்த ஊடகவியலாளர்களிடம் போய், எப்படி பரிசுத்தமான அரசியலையும் கொள்கைகளையும் பேச முடியும்? பணத்திற்காக தங்கள் பேனாவையும், கேமராவையும் விற்கும் கூட்டத்திடம் நேர்மையை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.
இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிடலாம். அவர் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றது முதல் இன்று வரை, இது போன்ற பொதுவான பத்திரிகையாளர் சந்திப்புகளை எத்தனையோ முறை தவிர்த்திருக்கிறார். நாட்டின் மிக உயரிய பதவியில் இருக்கும் பிரதமரே ஊடகங்களின் உள்நோக்கம் கொண்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கும் போது, முதல்வர் விஜய்யை மட்டும் குறிவைத்து கேள்வி எழுப்புவது ஏன் என்ற நியாயமான கேள்வி எழுகிறது. பிரதமரை நோக்கி இது போன்ற கேள்விகளை கேட்க துப்பில்லாத ஊடகங்கள், தமிழகத்தில் ஒரு புதிய மாற்றத்திற்காக வரும் தலைவரை மட்டும் வம்புக்கு இழுப்பது அவர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது.
இறுதியாக, இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் மக்கள் நேரடியாகவே சமூக ஊடகங்கள் வழியாக தலைவர்களின் கருத்துக்களை சென்றடைகிறார்கள். நடுவில் இருக்கும் ஊடகங்கள் என்னும் இடைத்தரகர்களின் தேவை தற்போதைய அரசியலுக்கு இல்லமால் போய்விட்டது. விஜய் எப்போது பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும், எப்போது மக்களிடம் நேரடியாக பேச வேண்டும் என்ற தெளிவான அரசியல் வியூகம் அவரிடம் இருக்கிறது. ஊடகங்கள் தங்களின் சுயலாப வதந்திகளை பரப்புவதை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தினால் மட்டுமே அவர்களுக்கான மரியாதையை தக்க வைத்து கொள்ள முடியும். அதை விடுத்து, தொடர்ந்து வதந்திகளை மட்டுமே நம்பி அரசியல் நடத்தினால், மக்கள் மத்தியில் ஊடகங்களின் இமேஜ் மேலும் டேமேஜ் ஆகுமே தவிர, விஜய்யின் மக்கள் செல்வாக்கை யாராலும் குறைக்க முடியாது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
