பெருநகர சென்னை மாநகராட்சியில் பல ஆண்டுகளாகத் தொடரந்து வந்த பாரம்பரிய டெண்டர் நடைமுறைகளில் தற்போது ஒரு மாபெரும் நிர்வாகப் புரட்சி ஏற்பட்டுள்ளது. வரி செலுத்தும் பொதுமக்களின் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வீணாகாமல் மிச்சப்படுத்தவும், ஒப்பந்ததாரர்களுக்குள் முன்கூட்டியே டெண்டரைப் பகிர்ந்துகொள்ளும் முறையற்ற லஞ்சக் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, மிகச் சிறிய அளவிலான குடிமைப் பணிகளுக்குக் கூட இனிமேல் ‘திறந்த போட்டி டெண்டர் முறை’ மட்டுமே பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அது அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதிரடியான வெளிப்படையான நிர்வாக மாற்றத்தின் முதல் கட்ட முடிவுகள், சென்னை மாநகராட்சியின் திட்டச் செலவுகளில் சுமார் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை பெரும் வீழ்ச்சியை, அதாவது அரசுக்கு லாபத்தை ஏற்படுத்திக் காட்டியுள்ளன.
இந்த புதிய போட்டி டெண்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக, தகுதியுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் நேரடி விளைவாக, சென்னை மாநகராட்சி திட்டங்களுக்காகச் செலவிடும் தொகை முன்னெப்போதும் இல்லாத வகையில் குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்ற பிறகு, சென்னை மாநகரச் சாலைகளைச் சீரமைக்கும் பணிகளுக்காக வெளியிடப்பட்ட முதல் கட்ட டெண்டர்களிலேயே இந்த நிர்வாக மாற்றம் மிகத் தெளிவாகப் பிரதிபலித்துள்ளது. இதில் பங்கேற்ற புதிய மற்றும் பழைய ஒப்பந்ததாரர்கள் பலரும், அரசு நிர்ணயித்திருந்த ஆரம்பக்கட்ட திட்ட மதிப்பீட்டுத் தொகையை விட 25 முதல் 30 சதவீதம் வரை மிகக் குறைவான விலைப்புள்ளிகளை அளித்து மாநகராட்சி அதிகாரிகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
கடந்த வாரம் பெருநகர சென்னை மாநகராட்சியால் வெளியிடப்பட்ட பேருந்து வழித்தடச் சாலை சீரமைப்பு டெண்டர்களில் இந்த செலவுக் குறைப்பு துல்லியமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, அம்பத்தூர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு சிறிய சாலைப் பணிக்கான டெண்டரில் 9 ஒப்பந்ததாரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அதில் ஒரே ஒரு நபர் மட்டுமே அரசு மதிப்பீட்டை விட 5 சதவீதம் அதிகமாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், எஞ்சிய 8 ஒப்பந்ததாரர்களும் 25 முதல் 30 சதவீதம் வரை குறைவான விலையைக் குறிப்பிட்டனர். இதனால், 25 லட்சம் ரூபாயில் முடிய வேண்டிய அந்தத் திட்டத்தின் இறுதிச் செலவு வெறும் 17 லட்சம் ரூபாயாகக் குறைந்து, மாநகராட்சிக்கு பெருமளவு பணம் மிச்சமாகியுள்ளது. இதேபோல், தொண்டையார்பேட்டை பகுதியிலும் 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான ஒரு சாலைப் பணிக்கு 10 ஒப்பந்ததாரர்கள் போட்டி போட்டுக்கொண்டு 25 சதவீதம் வரை குறைவான விலைப்புள்ளிகளைச் சமர்ப்பித்துள்ளனர்.
இருப்பினும், சோழிங்கநல்லூர் பகுதியில் சில ஒப்பந்ததாரர்கள் அரசு நிர்ணயித்த திட்ட மதிப்பீட்டை விட 36 சதவீதம் வரை மிகக் மிகக் குறைவாக விலைப்புள்ளிகளைக் குறிப்பிட்டுள்ளதால் ஒரு புதிய சவால் எழுந்துள்ளது. இவ்வளவு குறைந்த செலவில் ஒப்பந்தத்தை எடுத்துக்கொண்டு, தரமான முறையில் சாலைப் பணிகளை மேற்கொள்ள முடியுமா என்ற நியாயமான சந்தேகம் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. இதன் காரணமாக, மிகக் குறைந்த விலைக்குக் கேட்கப்பட்ட அந்த குறிப்பிட்ட சோழிங்கநல்லூர் டெண்டரை மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அதன் சாத்தியக்கூறுகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் தற்போது தீவிரமாக மறுபரிசீலனை செய்து வருகிறது. வெறும் பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமே நோக்கமல்ல, அதே நேரத்தில் பொதுமக்களுக்கான பணிகளின் தரத்திலும் எந்த சமரசமும் இருக்கக் கூடாது என்பதில் அதிகாரிகள் தெளிவாக உள்ளனர்.
இந்த அதிரடி டெண்டர் மாற்றம் குறித்துப் பெருநகர சென்னை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் தலைவர் ராமா ராவ் சில முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். கடந்த காலங்களில் அவசர வேலை என்ற காரணத்தைக் காட்டி, சிறிய பணிகளுக்கான ஒப்பந்தங்களை அதிகாரிகளுக்குத் தெரிந்த குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே நேரடியாக வாரி வழங்கும் முறை நடைமுறையில் இருந்தது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு ரகசியமாகத் தரப்பட்ட ஒப்பந்தங்களின் விலைப்புள்ளிகள் எப்போதுமே அரசு மதிப்பீட்டை விட 10 சதவீதம் அதிகமாகவே வைக்கப்பட்டு, மக்கள் பணம் வீணடிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய திறந்தவெளிப் போட்டி முறையால் தகுதியுள்ள அத்தனை ஒப்பந்ததாரர்களுக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதன் காரணமாக, எப்படியாவது ஒப்பந்தத்தைப் பெற வேண்டும் என்பதற்காக அனைவரும் நியாயமான குறைந்த விலையைத் தாங்களாகவே முன்வந்து மேற்கோள் காட்டுகின்றனர் என்று அவர் விளக்கியுள்ளார்.
முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றவுடன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக எடுத்த மிக முக்கியமான முதல் நடவடிக்கையே இந்த டெண்டர் சீர்திருத்தம்தான். குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு மட்டும் ஆன்லைனில் திறந்து வைக்கப்பட்டு, முன்கூட்டியே ஆட்களை நிர்ணயிக்கும் மோசடி டெண்டர் முறைகளை முற்றிலுமாக நிறுத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக, கடந்த சில நாட்களில் மட்டுமே சென்னை மாநகராட்சியின் பல்வேறு சிறிய மற்றும் நடுத்தரப் பணிகளுக்காக 150-க்கும் மேற்பட்ட திறந்தவெளிப் போட்டி டெண்டர்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 30 சதவீதத்திற்கும் மேல் குறைவாகக் கேட்கப்பட்டுள்ள டெண்டர்கள் அனைத்தும் முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு தற்போது தனிப்பட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
