OpenAI உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு சாட்போட்டான ChatGPT, ஒருவருக்கு பத்து வருடங்களாக எந்த மருத்துவர்களாலும், நிபுணர்களாலும், ஏன் நரம்பியல் நிபுணர்களாலும் கூட கண்டுபிடிக்க முடியாத ஒரு மருத்துவ புதிரை தீர்க்க உதவியதாக ரெடிட்டில் பதிவிடப்பட்ட ஒரு பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஒரு ரெடிட் பயனர், தனது பதிவுக்கு ” ChatGPT மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத 10 ஆண்டுகளுக்கும் மேலான பிரச்சனையை தீர்த்தது என்று தலைப்பிட்டு தனது தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:
“10 வருடங்களுக்கும் மேலாக எனக்கு பல விவரிக்கப்படாத அறிகுறிகள் இருந்தன. முதுகெலும்பு MRI, CT ஸ்கேன், ரத்தப் பரிசோதனைகள் , லைம் நோய் பரிசோதனை வரை எல்லாவற்றையும் செய்தேன். ஒரு நரம்பியல் நிபுணர் உட்பட பல சிறப்பு மருத்துவர்களை அணுகினேன். நாட்டின் முன்னணி சுகாதார மையங்களில் ஒன்றிலும் சிகிச்சை பெற்றேன். ஆனாலும், எந்த ஒரு குறிப்பிட்ட நோயறிதலையும் அவர்களால் செய்ய முடியவில்லை.
எனக்கு செய்யப்பட்ட உடல் பரிசோதனையில் ஹோமோசைகஸ் A1298C MTHFR மரபணு மாற்றம் இருப்பது தெரியவந்தது. நான் அமெரிக்காவில் இருக்கிறேன், என் மருத்துவர் நெட்வொர்க் நாட்டின் மிகச் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றில் பணிபுரிகிறார். ஒரு கட்டத்தில் நான் ஒரு நரம்பியல் நிபுணரைக்கூட சந்தித்தேன், MS நோய்க்கும் பரிசோதித்தேன்.
இந்த நிலையில் தான் எனது முழு அறிகுறிகளின் வரலாறு மற்றும் ஆய்வக தரவுகளை AI சாட்போட்டில் உள்ளீடு செய்தபோதுதான். “ChatGPT எனது அனைத்து ஆய்வக முடிவுகளையும், அறிகுறிகளின் வரலாற்றையும் எடுத்துக்கொண்டு, இந்த அறிகுறிகள் குறிப்பிட்ட மரபணு மாற்றத்துடன் ஒத்துப்போகின்றன என்று முடிவு செய்தது. B12 அளவுகள் சாதாரணமாக தெரிந்தாலும், மரபணு மாற்றத்தால், உடல் அவற்றை சரியாக பயன்படுத்த முடியாமல் இருக்கலாம். எனவே, சப்ளிமென்ட்ஸ் மூலம் அதை அதிகரிக்க வேண்டும்,” என்று அது பரிந்துரைத்தது.
AI-யால் உருவாக்கப்பட்ட இந்தத் தகவல்களை கொண்டு, பயனர் எனது மருத்துவரை அணுகினேன். இதைக் கேட்ட மருத்துவர் மிகவும் அதிர்ச்சியடைந்து, இவையெல்லாம் சரியாகவே பொருந்துகின்றன என்று கூறினார். MTHFR மரபணு மாற்றத்திற்காக என்னை ஏன் பரிசோதிக்கவில்லை என்று அவர்களுக்கு எப்படித் தெரியாமல் போனது என்று தெரியவில்லை.
“ChatGPT பரிந்துரையின்படி சிகிச்சையை ஆரம்பித்த பிறகு, எனது நிலையில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டது. எப்படியோ, சில மாதங்களுக்குப் பிறகு, என் அறிகுறிகள் பெருமளவில் மறைந்துவிட்டன. இது எப்படி நடந்தது என்று உண்மையில் குழப்பமாகவும், அதே நேரத்தில் உற்சாகமாகவும் இருக்கிறது,” என்று அந்த ரெடிட் பயனர் தனது பதிவை முடித்தார்.
மேலும் இதே பயனர் ஒரு எச்சரிக்கை குறிப்பையும் வெளியிட்டுள்ளார். ” எனது பதிவு இவ்வளவு கவனத்தை பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. AI பரிந்துரைகளை முயற்சிக்கும் முன், என் முதன்மை மருத்துவரிடம் இருமுறை சரிபார்த்தேன் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். மருத்துவ ஆலோசனைக்காக எப்போதும் AI-ஐ மட்டும் நம்ப வேண்டாம், AI பரிந்துரைகளை மருத்துவரிடம் கண்டிப்பாக கலந்துரையாடுங்கள்” என்று அவர் எழுதியுள்ளார்.