திருமண மண்டபத்தில் இருந்து தப்பித்து தலைமறைவான மணமகன்.. சில நிமிடங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்.. அதிர்ச்சியில் மணமகள் குடும்பத்தினர்.. என்ன நடந்தது?

  ஒரு திரில்லர் திரைப்படத்தை போலவே, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. சுமார் 15,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மஹாதேவ் சூதாட்ட செயலி பணமோசடி வழக்கில் முக்கிய சந்தேக…

 

ஒரு திரில்லர் திரைப்படத்தை போலவே, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. சுமார் 15,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மஹாதேவ் சூதாட்ட செயலி பணமோசடி வழக்கில் முக்கிய சந்தேக நபராக கருதப்படும் மணமகன், திருமண சடங்கு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அமலாக்கத்துறை சோதனையிலிருந்து தப்பிப்பதற்காக தலைமறைவானார். இது மணமகள் வீட்டார்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஜெய்ப்பூரில் உள்ள பிரமாண்டமான ஹோட்டலில் மணமகன் சௌரப் அஹுஜா திருமண நிகழ்வுக்காக தயாராகி வந்தார். ஆனால் அவர் தான் மஹாதேவ் சூதாட்ட செயலி ஊழல் வழக்கில் தேடப்படும் குற்றவாளி என்பது அங்கிருந்தவர்களுக்கு தெரியாது. இந்தநிலையில் அவரை கைது செய்வதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் திருமண இடத்திற்கு சென்றனர்.

ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் வருவது குறித்த தகவல் கிடைத்தவுடன் மணமகன் அஹுஜா, அங்கிருந்து சாமர்த்தியமாகத் தப்பி சென்றிருந்தார்.

மஹாதேவ் செயலியின் முக்கிய இயக்குநர்களுக்கு நெருங்கிய உதவியாளராக கருதப்படும் அஹுஜா, திடீரென ஒரு அவசர அழைப்பு வந்ததாக மணமகள் வீட்டாரிடம் கூறி, உடனே திரும்பி விடுவேன் என்றும் கூறி போனவர் அதன்பின் திரும்பவே இல்லை. அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்ய திருமண மண்டபத்திற்கு வந்தபோது, அவர் ஏற்கனவே தப்பி சென்றுவிட்டார் என்பது அவர்களுக்கு தெரிந்தது.

இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், மணமகள் மற்றும் விழாவில் கலந்துகொண்ட சிலரிடம் விசாரணை நடத்தினர். அஹுஜாவுக்கு உதவியதாகவும், அவர் தப்பி செல்வதற்கு வழிவகுத்ததாகவும் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மூவரும் மேலதிக விசாரணைக்காக ராய்ப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அஹுஜாவைக் கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கையை அமலாக்கத்துறை முடுக்கிவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பிரணவேந்திராவிடம் இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது. மஹாதேவ் செயலி மோசடி குறித்த விசாரணை தீவிரமாகத் தொடரும் நிலையில், வரும் நாட்களில் மேலும் பல முக்கியக் கைதுகள் எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் மணமகள் வீட்டாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் திருமணத்திற்கு முன்பே மணமகன் ஒரு மோசடியாளர் என தெரிய வந்ததால் நிம்மதி அடைந்துள்ளனர்.