வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக உள்ள முகம்மது யுனுஸ், இன்று திடீரென ஆலோசனைக் குழு கூட்டத்தை நடத்தினார். இதில், அரசியல் கட்சிகள் மற்றும் இராணுவத்துடன் உருவாகி வரும் பிணக்குகளை நிவர்த்தி செய்ய, தன் நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகள் குறித்து விவாதித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, வங்கதேச தேசியவாதக் கட்சி யுனுஸை பதவியிலிருந்து விலக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, அவர் ராஜினா செய்ய முன்வந்ததாக தகவல்கள் வெளியாகின. இதே நேரத்தில், இராணுவத்துடனான உறவிலும் பதற்றம் அதிகரித்துள்ளது. வங்கதேச இராணுவத் தளபதி வாகேர் உஸ்ஸமான், டிசம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் அரசாங்க ஆலோசனைக் குழு வெளியிட்ட அறிக்கையில், இடைக்கால அரசின் மூன்று முக்கிய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், அவை தேர்தலை நடத்துதல், நிர்வாக சீர்திருத்தம், நீதியமைப்பு ஆகியவை குறித்து பெருமளவு விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அரசின் சுதந்திரம், நீதிமுறை செயல்முறை மற்றும் சுதந்திரமான தேர்தலை குறைக்கும் எந்த முயற்சியும் ஏற்பட்டால், மக்களுடன் ஆலோசித்து தீர்வு எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசின் பணிகள் சிலரின் காரணமற்ற கோரிக்கைகள் மற்றும் திட்டமிட்ட தவறான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. நாட்டின் நிலைத்தன்மையை பேண, அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.
முகம்மது யுனுஸ் பதவி விலகவிருக்கிறார் என்ற செய்தி தற்போது பல்வேறு ஊடகங்களில் பரவி வருகிறது. “தற்போதைய சூழ்நிலையால் தன்னால் வேலை செய்ய முடியவில்லை” என யுனுஸ் தெரிவித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
நேஷனல் சிடிசன் பார்ட்டி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நாஹித் இஸ்லாம், வியாழக்கிழமை யுனுஸை சந்தித்த போது, அவர் ராஜினாவை பரிசீலிக்கிறார் என தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டது. ஆனால் யுனுஸ் அமைச்சரவையும், ஆலோசகர்களும் அவரை பதவியில் இருந்து விலக வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் வங்கதேச தேசியவாதக் கட்சியின் மூத்த தலைவர்கள், உடனடி தேர்தலுக்காக வலியுறுத்தி வருகின்றனர். ரத்தமின்றி அமைதியான அதிகார மாற்றம் வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜமாஅத்-ஈ-இஸ்லாமியும், நியாயமான தேர்தலே மக்களால் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வழி எனக் கூறியுள்ளது.
பல்வேறு வங்கதேச தேசியவாதக் கட்சி ஆதரவாளர்கள் சாலைகளில் உடனடி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதை அடுத்து, யுனுஸ் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. அதோடு, மாணவர் பிரதிநிதிகளை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்தியாவை பகைத்து கொண்டால் ஒன்று இந்தியாவுடன் சமாதானம் ஆக வேண்டும் அல்லது பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற நிலை தான் ஏற்பட்டுள்ளது. மாலத்தீவு அதிபர் போல் யூனுஸ் சமாதானம் ஆவாரா? அல்லது பதவியிழப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.