2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. பல தசாப்தங்களாக தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த பல தலைவர்களையும், செல்வாக்கு மிக்க கட்சிகளையும் ஒற்றை ஆளாக நின்று நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வீழ்த்தியுள்ளது. குறிப்பாக, ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் இந்த பொதுத்தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் முழுமையாக ‘வாஷ் அவுட்’ ஆகியுள்ளது, அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், வட தமிழகத்தில் பெரும் வாக்கு வங்கியை வைத்திருப்பதாக கருதப்பட்ட டாக்டர் ராமதாஸின் பாமக, தமிழக வாழ்வுரிமை கழகம் மற்றும் சசிகலாவின் அரசியல் நகர்வுகள் என அனைத்தும் விஜய்யின் அசுர வேகத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. ஜாதி மற்றும் மண்டல ரீதியான அரசியலுக்கு பெயர்பெற்ற இந்த கட்சிகள், தவெக-வின் புதிய அரசியல் பாய்ச்சலில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் தோல்வியைத் தழுவியுள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு என்பது பழைய ஜாதி அரசியலில் இருந்து மாறி, ஒரு புதிய நிர்வாகத்தை நோக்கியே உள்ளது என்பதை இந்த முடிவுகள் ஆணித்தரமாக உணர்த்துகின்றன.
திராவிட கூட்டணியின் பலமாக பார்க்கப்பட்ட விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் (இடது மற்றும் வலது) இந்த தேர்தலில் கடும் சரிவை சந்தித்துள்ளன. தலா 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள இந்த கட்சிகள், ஒரு காலத்தில் தீர்மானிக்கும் சக்தியாக இருந்த நிலையை இழந்து கிட்டத்தட்ட வாஷ் அவுட் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கொள்கை ரீதியான வாக்குகள் சிதறி, இளைஞர்களின் வாக்குகள் பெருமளவில் விஜய்யின் பக்கம் சாய்ந்ததே இந்த வீழ்ச்சிக்கு முதன்மை காரணமாக பார்க்கப்படுகிறது.
தேசிய கட்சியான பாஜக, விஜயகாந்தின் தேமுதிக மற்றும் டிடிவி தினகரனின் அமமுக ஆகிய மூன்று கட்சிகளும் தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று மிக மோசமான பின்னடைவை சந்தித்துள்ளன. இந்த ஆறு கட்சிகளும் தமிழக அரசியலில் தங்களது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே இப்போது போராட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, தங்களது 15 ஆண்டு கால அரசியல் பயணத்தில் பெரும் எழுச்சியைப் பெற்றதாகக் கூறப்பட்டாலும், இந்தத் தேர்தலில் பல தொகுதிகளில் டெபாசிட் தொகையை கூட பெற முடியாமல் பின்தங்கியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை சீமானின் வாக்கு வங்கியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதையே இது காட்டுகிறது. வெறும் பேச்சு அரசியலை தாண்டி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு மாற்று சக்தியாக மக்கள் தவெக-வையே அங்கீகரித்துள்ளனர் என்பது இந்தத் தீர்ப்பின் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது.
இறுதியாக, 11 அரசியல் கட்சிகளின் செல்வாக்கை ஒரே தேர்தலில் முறியடித்து வீட்டிற்கு அனுப்பியுள்ள விஜய்யின் இந்த வெற்றிதான் உண்மையான அரசியல் புரட்சியாக கொண்டாடப்படுகிறது. தமிழக மக்கள் சுமார் 50 ஆண்டுகால திராவிட மற்றும் ஜாதி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, விஜய்யின் தலைமையில் ஒரு புதிய விடியலை தேர்ந்தெடுத்துள்ளனர். எவ்வித கூட்டணியும் இன்றி தனித்து போட்டியிட்டு விஜய் படைத்துள்ள இந்தச் சாதனை, இனி வரும் காலங்களில் தமிழக அரசியலின் திசையை முழுமையாக மாற்றியமைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
