ஏர்டெல் உடன் கூட்டணி சேர்கிறது எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க்.. ஜியோவுக்கு ஆப்பு வைக்கப்படுமா?

  அமெரிக்க தொழில் அதிபர் எலான் மஸ்க் அவர்களின் ஸ்டார் லிங்க் விரைவில் இந்தியாவில் தனது சேவையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஏர்டெல் உடன் கூட்டணி சேர்ந்து தனது சேவையை வழங்க…

airtel starlink

 

அமெரிக்க தொழில் அதிபர் எலான் மஸ்க் அவர்களின் ஸ்டார் லிங்க் விரைவில் இந்தியாவில் தனது சேவையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஏர்டெல் உடன் கூட்டணி சேர்ந்து தனது சேவையை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இந்தியாவில் ஸ்டார் லிங்கின் முதல் அதிகாரப்பூர்வ கூட்டணியாக அமைத்துள்ளதாக ஏர்டெல் மற்றும் ஸ்டார் லிங்க் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்பேஸ் எக்ஸ் இந்தியாவில் ஸ்டார் லிங்க் சேவைகளை வழங்க அதிகாரப்பூர்வ அனுமதி வருவதற்கு முன்னரே இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் என்றும், இந்த கூட்டணி ஏர்டெல் சேவைகளை ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் இணையத்துடன் இணைத்து விரிவாக்குவதற்கான வழிகளை ஆய்வு செய்து வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, இந்தியாவில் ஸ்பேஸ் எக்ஸின் நேரடி வாடிக்கையாளர் மற்றும் தொழில்துறை சேவைகளை ஏர்டெல் சந்தை விரிவுபடுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார் லிங்க் சேவையை வழங்க ஸ்பேஸ் எக்ஸ் உடன் பணியாற்றுவது ஒரு முக்கியமான முடிவாகும்.

இது அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் இணைப்பை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிபாட்டை வெளிப்படுத்துகிறது என்றும் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், இந்தியாவின் மிகத் தொலைதூரமான பகுதிகளுக்கும் உயர்தர இணைய சேவை கிடைக்கும். மேலும், ஸ்டார் லிங்க் மற்றும் ஏர்டெல் சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான, அதே நேரத்தில் விலை குறைவான இணைய இணைப்பை உறுதி செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏர்டெல் – ஸ்டார்லிங் கூட்டணி, ஜியோவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.