2026 தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு முடிந்து முடிவுகளுக்காக தமிழகமே தவமிருக்கும் வேளையில், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளியாகும் எக்சிட் போல் முடிவுகள் பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன.
தேர்தல் முடிந்த கையோடு ஒரு சில முடிவுகள் வெளியான நிலையில், இரண்டு நாள் கழித்து திடீரென ‘அதிமுக 85, திமுக 75, தவெக 70, மற்றவை 4’ என ஒரு புதிய புள்ளிவிவர கணக்கு உலா வர தொடங்கியுள்ளது. இது என்னடா புதுக்கதையாக இருக்கிறது என்று பொதுமக்கள் முணுமுணுக்க தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு நிறுவனமும் ஒரு விதமான கணிப்பை வெளியிடுவதால், எக்சிட் போல் என்பது அறிவியல் பூர்வமான கணிப்பா அல்லது வெறும் யூகங்களின் தொகுப்பா என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.
இந்த திடீர் திருப்பம் நிறைந்த கணிப்பு, தமிழகத்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பதையும், ஒரு பலமான ‘தொங்கு சட்டசபை’ அமைய வாய்ப்புள்ளதையும் கோடிட்டுக் காட்டுகிறது. குறிப்பாக, ஆளுங்கட்சியான திமுக 75 இடங்களுக்கு தள்ளப்படுவதும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 85 இடங்களுடன் முன்னிலை பெறுவதும், அதே சமயம் முதல் தேர்தலை சந்திக்கும் விஜய்யின் தவெக 70 இடங்களைப் பிடிப்பதும் தமிழக அரசியலில் மிகப்பெரிய நிலநடுக்கத்தை உண்டாக்கியுள்ளது.
இந்த எண்கள் உண்மையானால், ஆட்சி அமைப்பதில் ஒரு மிகப்பெரிய இழுபறி நீடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த தரவுகள் எதன் அடிப்படையில் சேகரிக்கப்பட்டன என்ற தெளிவு இல்லாதது வாக்காளர்களை எரிச்சலடைய செய்துள்ளது.
பொதுமக்களின் அதிருப்திக்கு முக்கிய காரணம், இந்த எக்சிட் போல் முடிவுகள் மக்களின் உண்மையான தீர்ப்பை திசைதிருப்பும் முயற்சியோ என்ற அச்சம்தான். ஒரு நிறுவனம் தவெக-விற்கு 100 இடங்களுக்கு மேல் கொடுப்பதும், மற்றொன்று 70 என குறைப்பதும், இன்னொரு நிறுவனம் திமுக-தான் மீண்டும் வரும் என கூறுவதும் எக்சிட் போல்களின் நம்பகத்தன்மையை சிதைக்கின்றன.
உங்க கருத்துக்கணிப்பும் வேண்டாம், எக்சிட்போலும் வேண்டாம்; இன்னும் மூன்று நாள் பொறுத்திருந்து நாங்களே நேரடி முடிவை தெரிந்து கொள்கிறோம்” என மக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகவே தங்கள் கோபத்தை பதிவு செய்ய தொடங்கிவிட்டனர். புள்ளிவிவரப் போர் என்ற பெயரில் மக்களின் பொறுமையை சோதிப்பதாகவே இது பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலை பொறுத்தவரை, இது வெறும் திராவிட கட்சிகளுக்கு இடையிலான போட்டி மட்டுமல்ல, ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான களமாகவும் மாறியுள்ளது. 234 தொகுதிகளிலும் நிலவும் கள எதார்த்தத்தை ஒரு சில ஆயிரம் நபர்களிடம் எடுக்கப்படும் மாதிரிகளை வைத்து தீர்மானிக்க முடியாது என்பதே எதார்த்தம்.
குறிப்பாக, கிராமப்புற வாக்குகள் மற்றும் பெண்களின் வாக்குகள் எந்த பக்கம் சாய்ந்துள்ளன என்பதை எந்த கணிப்பாலும் துல்லியமாக பிடிக்க முடியவில்லை. எக்சிட் போல்கள் ஒரு மாய பிம்பத்தை உருவாக்க முயன்றாலும், வாக்கு இயந்திரங்களுக்குள் முடங்கிக்கிடக்கும் மக்களின் உண்மையான மௌன புரட்சி என்பது கணிப்புகளை தாண்டிய ஒன்றாகவே இருக்கும்.
முடிவாக, தமிழக அரசியல் களம் இப்போது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பின் உச்சியில் நிற்கிறது. மே 4-ஆம் தேதி வெளியாகப்போகும் அதிகாரப்பூர்வ முடிவுகள் மட்டுமே அனைத்து குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும். அதுவரை உலா வரும் இத்தகைய எக்சிட் போல் முடிவுகள் வெறும் விவாதங்களுக்கான தீனி மட்டுமே. திராவிட கட்சிகளின் பிடி தொடருமா அல்லது விஜய்யின் வருகை புதிய சரித்திரத்தை படைக்குமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். அதுவரை “பொறுத்திருப்போம், மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்ற மனநிலையில் தமிழக வாக்காளர்கள் நிதானமாக முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
