பாகிஸ்தானுடன் இந்தியா இடையே பஹால்கம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பரபரப்பு காரணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. புல்லட் புரூப் சிறப்பு வாகனங்கள், மற்றும் அவரது டெல்லி இல்லம் சுற்றியுள்ள பாதுகாப்பு சீரமைக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது ஜெய்சங்கருக்கு Z-வகுப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, இது மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 33 உறுப்பினர்களை கொண்ட கமாண்டோக்களின் குழுவை உள்ளடக்கியுள்ளது. அவர் பயணிக்கும் போது ஆறு ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் அவருடன் பயணம் செய்வார்கள். மேலும் அவர் இல்லத்தில் 24 மணி நேரமும் 10 பேர் பாதுகாப்பாக இருப்பார்கள்
வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தான் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் பாகிஸ்தானில் முக்கிய பயங்கரவாத முகாம்களை இலக்கு வைத்து 100% துல்லியமான தாக்குதல் நடத்தியதற்கு ஜெய்சங்கர் ஒரு முக்கிய காரணம் என்பதால் அவரை பழி தீர்க்க பயங்கரவாதிகள் முயற்சி செய்யலாம் என்றும் அதனால் தான் அவருக்கு பாதுகாப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது
அதேபோல் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் 25 பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மற்றும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோர் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் டெல்லி காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோரா தலைமையில் நடைபெற்ற உயர்தர கூட்டத்தில் இந்த கூடுதல் பாதுகாப்பு இறுதி செய்யப்பட்டது.