சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் டிசம்பர் 30-ந்தேதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக 31-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் (ஜனவரி) 1, 2-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கூறினார்கள்.
தெற்கு ஆந்திரா-வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து இருக்கிறது. இது மேலும் வலு குறைந்து அரபிக்கடல் பகுதிக்கு சென்றுவிடும். வலு குறைந்தாலும், அதன் ஈரப்பதம் ஆங்காங்கே காணப்படும் என்றே சொல்லப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக 31-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் (ஜனவரி) 1, 2-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, வடக்கில் இருந்து குளிர் காற்று முழுமையாக வீச தொடங்க இருப்பதால், அடுத்த மாதம் 3-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பனியின் தாக்கத்தால் குளிர் கடுமையாக இருக்கும் என்றும், அதிலும் கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை வாசஸ்தலங்களில் உறைபனி இருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக வறண்ட வானிலை, வறண்ட வடக்கு காற்று ஊடுருவல் நிகழும்போது, வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றதாக அறிவிக்கப்படும்.
அதன்படி, இந்த நிகழ்வு 3-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் ஏற்படக்கூடும் என்பதால், 10-ந்தேதி அல்லது அதன்பிறகு வடகிழக்கு பருவமழை விடைபெற்றதாக அறிவிப்பு வெளியாகலாம் எனவும், மொத்தத்தில் வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனிப்பொழிவு, குளிர், வெயில், மழை என குழப்பமான வானிலையாக நிகழக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறினார்கள்.