சென்னை ஆவடியில் பட்டா தர லஞ்சம்.. நில அளவை சார் ஆய்வாளர் கையும் களவுமாக சிக்கியது எப்படி?

சென்னை: சென்னையை அடுத்த ஆவடியில் ஆன்லைன் பட்டா வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்ட நில அளவை சார் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்…

Surveyor arrested for demanding Rs. 15,000 bribe to issue online patta in Avadi, Chennai

சென்னை: சென்னையை அடுத்த ஆவடியில் ஆன்லைன் பட்டா வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்ட நில அளவை சார் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் கோபாலபுரம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்த 30 வயதாகு சந்திரன் என்பவர், தனக்கு சொந்தமாக அதே பகுதியில் 2 வீட்டுமனைக்கு ஆன்லைன் பட்டா பெறுவதற்காக ஆவடி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவில் விண்ணப்பித்திருக்கிறார். சந்திரனின் மனுவை பரிசீலனை செய்து ஆன்லைன் பட்டா வழங்குவதற்காக நில அளவை பிரிவு சார் ஆய்வாளரான பொன்னேரி அடுத்த பஞ்செட்டி பகுதியை சேர்ந்த சுமன் (42) என்பவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

அவ்வளவு பணம் தர முடியாது என சந்திரன் கூறியதால் ரூ.15 ஆயிரம் கொடுத்தால் தான் ஆன்லைன் பட்டா பெறுவதற்கு பரிந்துரை செய்வேன் என சுமன் கூறியதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்திரன், அவர்கள் லஞ்சம் கேட்டதற்கான ஆடியோ ஆவணங்களுடன் சென்று திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து சுமனை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து அனுப்பினார்கள். அதன்படி நேற்று மாலை ஆவடி தாசில்தார் அலுவலகத்தில் இருந்த சுமனிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக சந்திரன் கொடுத்தார்.

சுமன் அந்த பணத்தை வாங்காமல் தனது உதவியாளரிடம் கொடுக்கும்படி தெரிவித்துள்ளார். பின்னர் சுமனின் உதவியாளரான திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த மெய்யூர் பகுதியை சேர்ந்த பொன்னையன் (28) என்பவரிடம் அந்த பணத்தை சந்திரன் அளித்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனே சென்று பொன்னையனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் சுமனையும் கைது செய்தனர். கைதான 2 பேரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.