சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில், பாதுகாப்புப் படைகளால் 27 நக்சலைட்டுகள் என்கவுண்டரில் கொல்லப்பட்ட நிலையில், இந்த நிகழ்வை, மகிழ்ச்சியோடு, விமர்சையாக அந்த பகுதி மக்கள் கொண்டாடினர்.மேலும் நாராயண்பூரில் நடந்த இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட மாவட்டத் தடுப்பு படை வீரர்களுக்கு, அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிந்தூர் (திலகம் ) வைத்து வரவேற்றனர்.
இந்த நிகழ்வின் காணொளிகளில், பெண்கள் வீரர்களின் மீது மலர் தூவி, அவர்களின் நெற்றியில் திலகம் இடும் காட்சிகள் உள்ளன. மேலும், வீடியோவில், மக்கள் வீரர்களுக்கு ‘குலால்’ பூசுவதையும், அவர்களை பாராட்டுவதையும் காணலாம்.
வீரர்களும் மக்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக நடனமாடுவதும், ஆடம்பரமாக கொண்டாடுவதும் காட்சிகளில் இடம்பெற்றுள்ளது.
கொண்டாட்டத்தின் போதும், மழை பெய்ததும் காணப்படுகிறது. மழையில் நனைந்தபடியே வீரர்கள் உற்சாகமாக கோஷமிடுகிறார்கள்.
பின்னர், வீரர்கள் வெற்றிக்கான குறியீடாக, பிரதான சாலையில் அணிவகுத்து இசையுடன் அணிவகுப்பு செய்தனர். அவர்களின் வீரத்திற்கு மரியாதையாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
பாதுகாப்புப் படைகளோடு, பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரும் இக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சில முக்கியமான நக்சலைட்டுக்கள் பலர் கொல்லப்பட்டனர். குறிப்பாக ரூ.1.5 கோடி வெகுமதியுடன் தேடப்பட்ட முக்கிய நக்சல் தலைவரான நம்பாலா கேசவ் ராவ், என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.
27 நக்சலைட்டுகள் கொல்லப்பட்ட இந்த என்கவுண்டர், ‘ஆபரேஷன் காகர்’ எனும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது நக்சல் ஆட்சி கொண்ட பகுதிகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இயக்கம்.
சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தின் ஆபுஜ்மாட் எனும் அடர்ந்த காடுகளில், DRG வீரர்களும் நக்சல்களும் சந்தித்தபோது, இந்த மோதல் கடந்த புதன்கிழமை காலை தொடங்கியது.
இந்த நடவடிக்கைக்கு முன், மத்திய குழு உறுப்பினர்கள், பொலிட்ப்யூரோ உறுப்பினர்கள், மாட் பிரிவு மற்றும் PLGA-வின் மூத்த உறுப்பினர்கள் தொடர்பான உளவுத்தகவலின் அடிப்படையில், நாராயண்பூர், டண்டேவாடா, பீஜாபூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்து DRG படையணிகள் அனுப்பப்பட்டன.
பஸ்தார் பிரிவில் உள்ள ஆபுஜ்மாட் பகுதி, நீண்ட காலமாக நக்சல் தாக்குதல்களின் மையமாக இருந்தது. இந்த நடவடிக்கையில், ஏகே-47 உள்ளிட்ட நவீன துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த ஆபரேஷன் குறித்து தனது X பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளதாவது: “இந்த சாதனையை எட்டிய பாதுகாப்புப் படைகளைப் பார்த்து பெருமைப்படுகிறேன். நக்சல் பிரச்சனையை முற்றிலும் ஒழித்து, மக்களுக்கு அமைதியும் முன்னேற்றமும் கொண்ட வாழ்க்கையை வழங்கும் முயற்சிக்கு நாங்கள் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளோம்” என கூறினார்.