இது என்ன மாரடைப்பு மாவட்டமா? 40 நாட்களில் 21 பேர் மாரடைப்பால் மரணம்.. அதில் பெரும்பாலானோர் இளைஞர்கள்.. என்ன தான் நடக்குது?

  கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், மாரடைப்பு மரணங்களின் திடீர் அதிகரிப்பால் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மூன்று பேர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், கடந்த 40 நாட்களில் மொத்தம் 21 பேர்…

heart attack

 

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், மாரடைப்பு மரணங்களின் திடீர் அதிகரிப்பால் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மூன்று பேர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், கடந்த 40 நாட்களில் மொத்தம் 21 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினர் என்பதுதான்.

இன்று மாரடைப்பால் உயிரிழந்தவர்களில், 50 வயது லேபாக்ஷி, 58 வயது பேராசிரியர் முத்தையா, மற்றும் 57 வயது அரசு ஊழியர் குமார் ஆகியோர் அடங்குவர். இவர்கள் மூவரும் வெவ்வேறு சூழல்களில் மாரடைப்பால் உயிரிழந்தனர்.

இந்த அச்சுறுத்தும் நிலையை சமாளிக்க, சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஹர்ஷ் குப்தாவின் அறிவுறுத்தலின்படி, ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ரவீந்திரநாத் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த 18 பேரில் ஒன்பது பேர் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் வேறு சில உடல்நல பிரச்சனைகள் கொண்டவர்கள் எனத்தெரிய வந்துள்ளது. ஆனால், ஐந்து பேர் 20 வயதை உடையவர்கள் என்றும், இவர்களில் நால்வர் பெங்களூருவில் இறந்தாலும், ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும். டைப்-1 நீரிழிவு மற்றும் நாள்பட்ட நோய்கள் சில மரணங்களுக்கு காரணமாக இருக்கலாம். உயிரிழந்த 18 பேரில் 16 பேர் தங்கள் வீட்டிலேயே இறந்திருப்பதால், அவர்களின் பழைய மருத்துவ பதிவுகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

“மற்ற உடல்நலக் காரணங்களைத் தவிர, இப்பகுதி மக்களின் இதய தசையை பாதிக்கும் மரபணுக்கள் காரணங்களும் இருக்கலாம்” என்று ஹாசன் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கோவிட்-19 மற்றும் இதய பிரச்சனைகளுக்கு இடையேயான தொடர்பை விசாரிக்க பிப்ரவரியில் அமைக்கப்பட்டிருந்த இந்த குழு, தற்போது அனைத்து ஹாசன் மருத்துவ அறிக்கைகளையும் ஆய்வு செய்து, 10 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 21 உயிரிழப்புகளில், ஐந்து பேர் 19-25 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் எட்டு பேர் 25-45 வயதுக்குட்பட்டவர்கள். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்பது அப்பகுதி மக்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஹாசன் மாவட்டத்தில் பதிவான 507 மாரடைப்பு வழக்குகளில் 190 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மாரடைப்பு வழக்குகளின் இந்த அபாயகரமான அதிகரிப்பு காரணமாக, பெங்களூருவில் உள்ள ஜெயதேவா மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வெளிநோயாளர் பிரிவுகளில் தற்போது கூட்டம் நிரம்பி வழிகிறது. இது மக்களின் அச்சத்தையும், அப்பகுதியில் அவசரமாக விரிவான இருதய சிகிச்சை தேவை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.