பெங்களூருவில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு நில விற்பனை தற்போது சட்ட போராட்டமாக உருவெடுத்துள்ளது. 2006ஆம் ஆண்டு சொத்தை விற்றவரின் மகள், தற்போது அந்த சொத்தின் உரிமையாளர்களுக்கு சட்ட அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த விற்பனை தனக்கு தெரியாமல், தன் ஒப்புதல் இல்லாமல் நடந்ததாகவும், அப்போது தான் வயது வந்தவராக இருந்தபோதிலும் தனது உரிமைகள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறி, இப்போது இழப்பீடு கோருகிறார். ஆனால், இந்த விற்பனை சொத்தின் அசல் உரிமையாளரால் நேரடியாக நடத்தப்பட்டது என்றும், இதில் எந்த பவர் ஆஃப் அட்டர்னியும் பயன்படுத்தப்படவில்லை என்றும் தற்போதைய உரிமையாளர்கள் உறுதியாக தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து ரெடிட்டில் பெண் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதில் “என் அப்பா 2006ஆம் ஆண்டு பெங்களூருவில் ஒரு நிலத்தை வாங்கினார். இப்போது, அந்த நிலத்தை விற்றவரின் மகள் எங்களுக்கு ஒரு சட்ட அறிவிப்பு அனுப்பியுள்ளார். அதில், நிலத்தை விற்க தான் சம்மதிக்கவில்லை என்றும், நியாயமான இழப்பீடு கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். முதலில், அந்த பெண்ணின் அண்ணன் இந்த விஷயத்தை இணக்கமாக தீர்க்க முயற்சிப்பதாக எங்களிடம் தெரிவித்தார். ஆனால், பின்னர் அவர்கள் சட்டப்படி செல்வதால், நாங்களும் சட்டப்படி செல்லுமாறு கூறினார். இதை சமாளிக்க நாங்கள் ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளோம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கடந்த இரண்டு நாட்களாக, நிலத்தை விற்றவரின் மகன் எங்களிடம், ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி அந்த பெண்ணின் கையெழுத்தை பெற்று வழக்கை முடித்துக்கொள்ளுமாறு மறைமுகமாக கேட்டு வருகிறார். நாங்கள் சட்டப்படி செல்கிறோம் என்று அவரிடம் தெளிவுபடுத்தியும், அவர் ‘சமரசம் செய்துகொண்டு இதை முடித்துவிடுங்கள்’ என்று கூறுகிறார். இது குறித்து எனது வழக்கறிஞரிடம் பேசினேன், எங்களுக்கு வலுவான வழக்கு இருப்பதால் சட்டப்படி தொடரலாம் என்று அவர் உறுதியளித்தார்,” என அந்த பயனர் விளக்கமளித்துள்ளார்.
அந்த பயனர் பகிர்ந்த தகவல்படி, அவரது தந்தை 2006ஆம் வாங்கிய அந்த சொத்து, BBMP (Bruhat Bengaluru Mahanagara Palika) எல்லைக்குள் வருகிறது. இந்த விற்பனை நேரடியாக விற்றவரால் கையாளப்பட்டது என்றும், இதில் பவர் ஆஃப் அட்டர்னி எதுவும் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தை விற்றவர் இன்னும் உயிருடன் இருந்தாலும், அவர் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரது மகன் அவருக்கு பதிலாகப் பேசி வருகிறார். சொத்தை வாங்கியதிலிருந்து, பயனரின் குடும்பம் அனைத்து சொத்து வரிகளையும் முறையாக செலுத்தி வருகிறது.
விற்பனை நடந்தபோது, நிலத்தை விற்றவரின் மகள் ஏற்கனவே வயது வந்தவராக இருந்துள்ளார். பயனரின் கூற்றுப்படி, நிலத்தை விற்றவரும் அவரது மகனும் முன்பு, அந்த சொத்து அவரது மகளின் திருமண செலவுகளுக்காகவே விற்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். மகள் மற்றும் மகன் உட்பட, விற்றவரின் முழு குடும்பமும் சர்ச்சைக்குரிய சொத்துக்கு அருகிலேயே வசித்து வருகின்றனர். பயனரின் முக்கிய கவலை, நிலத்தை விற்றவரின் மகன் மீதே உள்ளது. அவர் ஆரம்பத்தில் சட்ட அறிவிப்பை ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று குறைத்து மதிப்பிட்டு, இணக்கமாக தீர்க்க விரும்புவதாக கூறினார். ஆனால், பின்னர், தங்கள் குடும்பத்திற்குள் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாகவும், இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் எதிர்கொள்ளப்படும் என்றும் பயனர் குடும்பத்திடம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், நிலத்தை விற்றவரின் மகன், சட்ட போராட்டம் இன்றி, மகளுடன் நேரடியாக இந்த விவகாரத்தை தீர்த்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்க தொடங்கியுள்ளார். நீதிமன்றங்களை நாடாமல் இந்த பிரச்சினையை தீர்க்கவும் தங்கள் தரப்பு வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், இந்த உரையாடல்களின் போது, அவர் நுட்பமான அழுத்தம் கொடுக்கும் விதமாகவோ அல்லது மறைமுகமாக எச்சரிக்கும் விதமாகவோ சில கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. உதாரணமாக, “நீதிமன்றம் மகளுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தால் உங்கள் குடும்பம் என்ன செய்யும்?” என்று அவர் கேள்வி எழுப்பியது, பயனர் குடும்பத்தினரை அச்சுறுத்தும் அல்லது கலக்கமடைய செய்யும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
இந்த இடுகையைப் பார்த்த சிலர், வாங்குபவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்து, அரசு பதிவுகளுடன் ஒத்துப்போனால், கவலைப்பட அதிகம் இல்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். இருப்பினும், மற்றவர்கள் எச்சரிக்கை செய்தனர். இது ஒரு சிக்கலான குடும்ப சொத்து தகராறாக இருக்கலாம் என்றும், மகளுக்கு உரிய பங்கு மறுக்கப்பட்டதாக அவர் நம்புவதிலிருந்து இது வந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
இந்த இடுகைக்கு பதிலளித்த ஒரு பயனர், “உங்களிடம் 2006ஆம் ஆண்டின் விற்பனை பத்திரங்கள் மற்றும் உங்கள் பெயரில் உள்ள ஆய்வுகள் இருந்தால், சட்டப்படி உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. என்று எழுதினார்.
மற்றொருவர், “சமரசம் செய்யாதீர்கள். இது ஒரு மோசடி அல்லது பரம்பரை சொத்தை அபகரிக்கும் முயற்சியாகவே தெரிகிறது. மகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. மகன் தனது பங்கை செலுத்தும் வரை அல்லது வாங்குபவர்கள் கூடுதல் பணம் செலுத்தும் வரை அவள் தொடர்ந்து தொந்தரவு செய்ய தயாராக இருக்கிறாள்,” என்று ஒரு கருத்து குறிப்பிட்டுள்ளது.
பெரும்பாலானோர் அந்த சொத்தை விற்றதே மகளின் திருமணத்திற்காக தான். அபப்டி என்றால் அந்த சொத்தை விற்ற பணம் எல்லாமே மகளுக்கு தான் போய் சேர்ந்துள்ளது. அப்படி இருக்க அவர் வழக்கு தொடர்வது மனசாட்சியே இல்லாத செயல் என்று பதிவு செய்து வருகின்றனர்.