மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஒரு பயங்கர வன்முறைச் சம்பவம், மக்களின் பாதுகாப்பிலும், மருத்துவமனைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் உள்ள ஆழமான ஓட்டைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள நர்சிங்பூர் அரசு மாவட்ட மருத்துவமனை வளாகத்தினுள், சந்திய சவுத்ரி என்ற 12 ஆம் வகுப்பு மாணவியின் காதலனால் பொதுமக்கள் கண்முன்னேயே கொடூரமாக கொல்லப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக, யாரும் இந்த கொலையை தடுக்க முன்வரவில்லை.
சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த அதிர்ச்சி காணொளியில், குற்றவாளியான அபிஷேக் என்பவர் அந்த மாணவியின் கழுத்தை அறுக்கும்போது, அங்கிருந்த பொதுமக்கள், மருத்துவமனை ஊழியர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோய், எதுவும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். மருத்துவமனை தரையில் ரத்தம் வழிந்து, அந்த பெண் உயிரிழக்கும்போதும், சிலர் சாதாரணமாக அருகில் நடந்து செல்வதையும் காண முடிந்தது.
அபிஷேக் முதலில் அந்த மாணவியிடம் சாதாரணமாக பேசி கொண்டிருந்ததாகவும், பின்னர் திடீரென மாணவியை அறைந்து, தரையில் தள்ளி, அவரது மார்பின் மீது ஏறி அமர்ந்து அழுத்தி, பின்னர் கத்தியால் அவரது கழுத்தை அறுத்துள்ளார்.
இந்தத் தாக்குதல் சுமார் 10 நிமிடங்கள் நீடித்த நிலையில் இவையனைத்தும் பட்டப்பகலில், அவசர சிகிச்சை பிரிவின் சில மீட்டர்கள் தொலைவிலேயே நடந்தேறின. பின்னர், அபிஷேக் தனது சொந்தக் கழுத்தை அறுக்க முயன்றான். அதில் தோல்வியடைந்து, மருத்துவமனையிலிருந்து தப்பி, வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தில் ஏறி மறைந்துவிட்டார்.
கொலை நடந்த நேரத்தில், இரண்டு பாதுகாப்பு காவலர்கள் பணியில் இருந்தும் தடுக்க யாருமில்லை. மருத்துவமனைக்குள், ஒரு மருத்துவர், செவிலியர்கள், வார்டு பாய்கள் உட்பட பல ஊழியர்களும் இருந்தும் அனைவரும் வேடிக்கை பார்த்ததுதான் கொடுமையிலும் கொடுமை.
அன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் தனது வீட்டிலிருந்து மாணவி புறப்பட்டு மகப்பேறு வார்டில் இருந்த தனது தோழியின் மாமியாரை பார்க்க சென்றதாகவும் அப்போதுதான் அபிஷேக் மாணவியிடம் பேசியதாகவும், இருவரும் சில நிமிடங்கள் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென இந்த சந்திப்பு கொடூரமான கொலையில் முடிந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மாணவியின் குடும்பத்தினருக்குப் பிற்பகல் 3:30 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு வந்தபோது, சந்தியாவின் உடல் இன்னும் அதே கொலை நடந்த இடத்திலேயே கிடந்தது. இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த சந்தியாவின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வெளியே சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 10:30 மணி வரைதான் போராட்டம் நடந்த நிலையில் தப்பியோடிய அபிஷேக்கை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என காவல்துறை உறுதியளித்த பின்னரே மாணவியின் குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டனர்.