குழந்தை பிறப்பிற்கு பின் ஏற்படும் மனஅழுத்தம்? இளம் தாய்மார்களே கவனம் தேவை…!

Published:

குழந்தை பிறப்பு என்பது மகிழ்ச்சி‌ நிறைந்த ஒரு விஷயமாகும். குழந்தைகளை ரசிக்காதவர் யாரும் இருக்க மாட்டார். ஒரு மழலையின் சிரிப்பு நம்முடைய ஒட்டுமொத்த கவலைகளையும் மறக்கச் செய்து அந்த அழகை ரசிக்கச் செய்துவிடும். ஆனால் அந்தக் குழந்தையை பெற்ற தாய் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

mom

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான தாய்மார்கள் இந்த குழந்தை பிறப்பிற்கு பின் ஏற்படும் மனஅழுத்தத்தினால் (Postpartum depression) பாதிக்கப்படுகிறார்களாம். கிட்டத்தட்ட 15% சதவீத தாய்மார்கள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

70-80% தாய்மார்களுக்கும் இந்த மனஅழுத்தம் சிறிதளவு ஏற்படுவது இயல்பு அது குழந்தை பிறந்த இரண்டு மூன்று நாட்களில் தொடங்கி இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும். இதனை பேபி ப்ளூஸ் (baby blues) என்று அழைப்பார்கள். ஆனால் அதற்கு மேலும் தொடர்ந்தால் அது மனஅழுத்தத்திற்கான அறிகுறிகள் ஆகும்.

அறிகுறிகள்

  1. தூக்கமின்மை
  2. வெறுப்புணர்வு
  3. பசியின்மை
  4. எதன் மீதும் ஆர்வம் இல்லாமல் இருத்தல்.
  5. குழந்தை மீதும் ஈடுபாடு இன்றி இருத்தல்
  6. அதிக அளவு மூட் ஸ்விங்க் ஆகுதல். கோபம், அழுகை, பதற்றம், குற்ற உணர்வு போன்ற உணர்வுகள் மாறி மாறி வெளிப்படுதல்.
  7. தனிமையை உணர்தல் அல்லது தனிமையை மட்டும் விரும்புதல்.

PPD depression

காரணங்கள்

  • குழந்தை பிறப்பிற்குப் பிறகு இயல்பாகவே தாய்க்கு தூக்கம் என்பது குறைந்து விடுகிறது.  பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக இரவில் நெடுநேரம் விழித்திருக்க வேண்டிய அவசியமும் உண்டாகிறது. இரவும் பகலும் அவர்களுக்கு தூக்கம் என்பது வெகுவாக குறைந்து விடுகிறது. குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலை,  பராமரிப்பு என அனைத்தும் சேரும் பொழுது சரியான ஓய்வு இன்மை, தூக்கமின்மையால் பல்வேறு தாய்மார்கள் பாதிப்பிற்குள்ளாகிறர்கள்.
  • பிரசவத்திற்கு பின் தாய்மார்கள் உடலில் சில  ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் இந்த ஹார்மோன் மாற்றங்களினாலும் மனஅழுத்தம் ஏற்படலாம்.
  • குடும்பத்தாரின் அக்கறையும் கவனிப்பும் போதிய அளவு இல்லாத பொழுதும் இவ்வகை மனஅழுத்தம் ஏற்படலாம்.

mom and child

பிரசவத்திற்கு பின் தாய்மார்கள் செய்ய வேண்டியது

  1. நன்கு ஓய்வெடுங்கள். உங்கள் உடல்‌ மற்றும் மனம் பழைய நிலைக்குத் திரும்ப நல்ல ஓய்வு முதலில் அவசியம். குழந்தை தூங்கும் நேரமோ அல்லது குழந்தையை மற்றவரிடம் சிறிது நேரம் ஒப்படைத்து விட்டோ ஆழ்ந்து உறங்குங்கள்.
  2. நல்ல ஆரோக்கியமான உணவினை உட்கொள்ளுங்கள். மருத்துவரின் அறிவுரை இன்றி பத்தியம் என்ற பெயரில் உணவு உண்பதோ அல்லது பட்டினியாய் இருப்பதோ விரதம் இருப்பதோ கூடாது. உங்கள் உடலுக்கு தேவையான அளவு நல்ல ஆரோக்கியமான உணவினை தினமும் உட்கொள்ளுங்கள்.
  3. உதவி கேட்க தயங்காதீர்கள். வீட்டு வேலைகளிலோ அல்லது குழந்தை பராமரிப்பிலோ உங்களுக்கு யாரேனும் ஒருவர் உதவினால் நன்றாக இருக்கும் என்று தோன்றினால் உங்கள் குடும்ப உறுப்பினரிடமோ அல்லது நண்பர்களிடமோ உதவி கேட்க தயங்காதீர்கள். ஒரு நாளில் ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ அடுத்தவருடைய உதவி உங்களுக்கு கிடைத்தால் அந்த நேரத்தை ஓய்வெடுக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
  4. உங்கள் குழந்தைக்கு நீங்கள் தான் சிறந்த தாய். நாம் சரியாகத்தான் நம் குழந்தையை பார்த்துக் கொள்கிறோமா? நம் குழந்தைக்கு நம்மால் இதை செய்ய முடியவில்லை என்பது போன்ற தேவையற்ற கவலைகளை கைவிட்டு குழந்தையுடன் மகிழ்ச்சியான நேரத்தை மட்டும் உருவாக்குங்கள்.
  5. உங்களுக்காகவும் நேரத்தை செலவிடுங்கள். உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்‌. எளிமையான யோகா உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். உங்கள் உடல் நலனில் போதிய அக்கறையை செலுத்துங்கள்.
  6. மனஅழுத்தம் அதிக அளவு இருந்தால் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த உங்களால் முடியவில்லை என்று தோன்றினால் உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

மேலும் உங்களுக்காக...