ஒரு பெண்ணுக்கு எவ்வளவுதான் இந்த உலகில் சந்தோஷம் கிடைத்தாலும் அவளுக்கு தேவையான ஒரே சந்தோஷம் அவளது கணவனின் அன்பு மட்டும்தான். கட்டிய கணவன் மனைவிக்கு 3 வேளை உணவு, உடுத்த உடை மட்டும் கொடுத்தால் போதாது. இவை இல்லாமல் கூட வாழ்ந்து விடுவாள். ஆனால் கணவனின் அன்பு மட்டும் இல்லாமல் ஒரு பெண்ணால் வாழ முடியாது.
மனைவியின் தவறை அடிக்கடி குத்திக் காட்டாதீங்க. அவளது நல்ல செயலை ஒருமுறையாவது மனம் திறந்து பாராட்டுங்க. சொந்தங்களை எல்லாம் விட்டு விட்டு கணவன்தான் உலகம் என உங்க பின்னால் வருகிறாள். அவளை நீங்க உலகமாக நினைக்க வேண்டாம். ஒரு உயிராக மதித்தால் போதும்.
இப்படி மட்டும் செய்து பாருங்கள். அவளுக்கு உலகமே தன் காலடியில் தான் என்று பெருமை கொள்வாள். மனைவியிடம் உங்களோட வீண் கவுரவத்தைக் காட்டாதீங்க. என் சொத்து, என் சம்பாத்தியம்னு பிதற்றாதீங்க. அப்படின்னா அவள் யார்? உங்க கூட அவள் வாழும் வாழ்க்கைக்கு என்னதான் அர்த்தம்?
நான், நீ என்று எப்போதும் பிரித்துப் பேசாதீர்கள். நாம் என்று பேசுங்க. மனைவி தான் வாழ்வின் பொக்கிஷம். இதைப் புரிந்து வாழ்க்கை நடத்தினால் மனைவியின் மகத்துவத்தை உணர முடியும். யாராலும் மறுக்க முடியாத உண்மை ஒன்று உண்டு. கணவன் இல்லைன்னா மனைவி விதவை. ஆனா மனைவி இல்லைன்னா கணவன் அனாதை.
மனைவியை அவளது பெற்றோர், உறவினர் வீடுகளுக்குச் செல்ல தாராளமாக அனுமதியுங்கள். அடிமை போல நடத்தாதீங்க. மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது வெறும் காசு, பணம் இல்லை. எவ்வளவு சண்டை சச்சரவுகள் வந்தாலும் மனைவியை விட்டுக் கொடுக்காமல் பேசுவதுதான்.
பிரசவ வலியை விட ஒரு பெண்ணுக்குக் கொடுமையானது என்னன்னா தன் கணவன் தன்னை இன்னும் புரிந்து கொள்ளவில்லையே என்ற வேதனைதான். மனைவியைக் கைநீட்டி அடிக்கப் போகிறீர்களா?
ஒரு நிமிஷம் அவளது பிரசவ வலியை நினைத்துப் பாருங்கள். அடிக்க வரும் கை அந்த நிமிடமே அணைக்கத் துடிக்கும். அன்பை போலவே அவளது வெறுப்பும் ஆழமானது. அவளுக்கு அன்பு காட்டியவர்கள் எட்டி உதைத்தாலும் ஏற்றுக் கொள்வாள். ஆனால் அவள் வெறுத்து விட்டால் கோடி ரூபாயைக் கொட்டி கொடுத்தாலும் ஏற்க மாட்டாள்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


