உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த மனிஷா என்ர பெண், தனது கணவர் மீது துணிச்சலாக புகார் அளித்துள்ளார். கணவரின் பெயரில் போலியான ஆதார் அட்டைகள், பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களை கண்டறிந்ததும், அவர் உடனடியாக காவல்துறையை நாடினார். கணவர் தேச விரோத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஷாம்லி கோட்வாலி காவல் நிலையத்தில் 34 வயதான தனது கணவர் முகமது இம்தியாஸ் என்பவர் மீது மனிஷா புகார் அளித்தார். 2017-ம் ஆண்டு முகமது இம்தியாஸை திருமணம் செய்ததாகவும் தனது கணவர் பவுன்சராக வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
முதலில் சில ஆண்டுகள் உறவு சுமூகமாக சென்று கொண்டிருந்த நிலையில் சில வருடங்களில் கணவரின் குடும்பத்துடனான தொடர்பு குறைய தொடங்கியதாகவும், இதனால் தனக்கு அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
அப்போதுதான் அவர் தனது கணவரின் ஆவணங்களை சோதித்தபோது, பல போலி அரசாங்க அடையாள ஆவணங்கள், வெவ்வேறு பெயர்களில் பல ஆதார் அட்டைகள், மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவற்றை கண்டுபிடித்ததாகவும், இவை மட்டுமின்றி, அவரது ஆவணங்களில் ‘திருமணமாகாதவர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததையும் கண்டுபிடித்தது அதிர்ச்சி அடைந்ததாகவும் மனிஷா தெரிவித்துள்ளார்.
கணவரை நேருக்கு நேர் கேள்வி கேட்டபோது, தன்னையும் தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிடுவதாக முகமது இம்தியாஸ் மிரட்டியதாக மனிஷா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். முகமது வீட்டிற்கு திரும்பியதும் தன்னை தாக்கி, ஆவணங்களை பறிக்க முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எப்படியோ சில ஆவணங்களை மனிஷா காப்பாற்றிய நிலையில், காவல்துறையை அணுகி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் ராம் சேவக் கௌதம், தேச விரோத செயல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் ஆழமாக விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதே நேரத்தில், மனைவியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஒரு குடும்ப தகராறும் காரணமாக இருந்திருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருவதாக அவர் கூறினார். மனிஷா சமர்ப்பித்த ஆவணங்களின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டு வருகிறது. மேலும், விசாரணை தொடர்வதால் கூடுதல் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
மனிஷா கூறியபடி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால், இது காவல்துறைக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும். குறிப்பாக, இந்திய அரசாங்கம் நாடு முழுவதும் பயங்கரவாதம் மற்றும் தேச விரோத செயல்களுக்கு எதிராக கடுமையாக செயல்பட்டு வரும் இந்த நேரத்தில் மனிஷாவின் இந்த புகார் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.