ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் உறவில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள சில இனிப்பு கடைகள் ‘மைசூர் பாக்’ என அழைக்கப்படும் பிரபல இனிப்பின் பெயரை ‘மைசூர் ஶ்ரீ’ என மாற்றியுள்ளன. இது பலரது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
மைசூர் அரண்மனையின் சமையலறையில் மைசூர் பாக்’வை உருவாக்கிய அரசரின் சமையல்காரரின் வாரிசு எஸ். நடராஜ் என்பவர் இப்போதும் மைசூரில் மைசூர்பாக்கை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
“இது மைசூர் பாக், இதற்கு வேறு எந்த பெயரும் இருக்க முடியாது. இது எங்கள் மூதாதையரால் உருவாக்கப்பட்ட ஒரு மரபு. எவ்வாறு சிறப்பிடங்கள், மரபுகள் தங்கள் இயல்பான பெயருடன் இருப்பதோ, இதுவும் அப்படியே இருக்கவேண்டும். பெயரை மாற்றுவதை ஏற்க முடியாது.”
“‘பாக்’ என்பது கன்னடத்தில் சர்க்கரை பாகு என்பதை குறிக்கும். இது மைசூரில் உருவானதால் ‘மைசூர் பாக்’ என அழைக்கப்படுகிறது. இதற்கு வேறு பெயர் இருக்கவே முடியாது,” என்றார்.
“உலகின் எந்த பகுதியிலும் இதைப் பார்த்தவுடன், மக்கள் அதை ‘மைசூர் பாக்’ என்று தான் அழைப்பார்கள், அழைக்க வேண்டும். அதன் பெயரை மாற்ற யாருக்கும் அதிகாரம் கிடையாது,” என அவர் கூறினார்.
இவருடைய குடும்பம் இன்னும் ‘குரு ஸ்வீட்ஸ்’ எனும் பழமையான கடையை மைசூரில் நடத்தி வருகிறது. இக்கடை தலைமுறை தலைமுறையாக நடந்து வருவதுடன், அரண்மனை இனிப்பை மக்களுக்கு அறிமுகப்படுத்தவே ஆரம்பிக்கப்பட்டது.
அதே தலைமுறையின் நான்காம் தலைமுறை உறுப்பினர் சுமேக் என்பவர் கூறியதாவது:
“மைசூர் பாக் என்பது வெறும் இனிப்பு அல்ல; அது மைசூரு, கர்நாடகா மற்றும் கன்னட மக்களின் பண்பாட்டு பெருமையை பிரதிபலிக்கிறது. இது நம் இனிய கலாச்சாரம் மற்றும் மரபுகளின் சுவையைக் காட்டுகிறது. உலகம் முழுக்க இது ‘மைசூர் பாக்’ என்றே அறியப்படுகிறது. இதன் பெயரை மாற்றி சர்ச்சைகளில் இழுக்க வேண்டாம்.”