பாகிஸ்தானுக்காக உளவு சொன்னதாக சந்தேகிக்கப்படும் ராஜஸ்தான் அரசுப் பணியாளரை போலீசார் கைது செய்த நிலையில் கைதான நபர் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஷாலே மொஹம்மதின் உதவியாளராக இருந்தவர் என்றும், அவர் முன்னாள் அமைச்சருக்கே தெரியாமல் பல முறை பாகிஸ்தான் சென்றுள்ளார் என்றும் பாஜக கூறியுள்ளது.
ராஜஸ்தான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக பணியாற்றும் சகூர் கான் என்பவரது மொபைல் சாதனத்தில் பாகிஸ்தான் தொலைபேசி எண்கள் சேமிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உளவுத்துறை வட்டாரங்கள் இதுகுறித்து விசாரணை செய்தபோது சகூர் கான் 2011 முதல் தற்போது வரை ஏழு முறை பாகிஸ்தான் சென்று உறவினர்களை சந்தித்துள்ளார்.
ஜெய்சல்மரில் இருந்து பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தகவல்களை கான் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு உள்ளதாகவும், தற்போது மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அவரை விரிவாக விசாரித்து வருகின்றனர்.
பாதுகாப்பு சம்பந்தமான தகவல்களின் அடிப்படையில், கான் நேற்று இரவு உளவுத்துறை குழுவால் கைது செய்யப்பட்டார் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
“சகூர் கான் பாகிஸ்தானுக்காக உளவு செய்து இருக்கலாம் என்ற தகவல்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து அவர் கண்காணிக்கப்பட்டார். நேற்று இரவே அவர் கைது செய்யப்பட்டார்,” என அவர் கூறினார்.
கான் அரசியல் தொடர்புகளை பற்றி போலீசார் எதுவும் கூறவில்லை. இருப்பினும் பாஜக வட்டாரங்கள் கைதானவர் முன்னாள் அமைச்சர் ஷாலே மொஹம்மதின் தனிப்பட்ட உதவியாளராக இருந்தவர் என தெரிவித்துள்ளன. ஷாலே மொஹம்மதிடம் கருத்து கேட்க முடியவில்லை.
கானிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், அவர் பாகிஸ்தானில் மத தளங்களை பார்வையிடவும், உறவினர்களை சந்திக்கவும் பாகிஸ்தான் சென்றதாக கூறியுள்ளார் என்று அவரை விசாரணை செய்த அதிகாரி தெரிவித்தார். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரத்தில் காங்கிரசை பாஜக கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா, “ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சாலே மொஹம்மதின் தனிப்பட்ட உதவியாளர் சகூர் கான், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்காக உளவு செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. எல்லைப் பகுதிகளின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானிய அதிகாரிகளுடன் பகிர்ந்துள்ளார்,” என X-இல் பதிவு செய்தார். “காங்கிரசின் இரத்தத்தில் பாகிஸ்தான் பக்தி பதியப்பட்டுள்ளது,” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
பாஜக தேசிய பேச்சாளர் பிரதீப் பண்டாரி, “காங்கிரஸ் வெறும் ஊழல்மிக்க கட்சி மட்டுமல்ல, இது நாட்டுக்கு விரோதமானது” எனக் கூறினார்.
“காங்கிரசின் முன்னாள் அமைச்சர் ஷாலே மொஹம்மதின் உதவியாளர் பாகிஸ்தானின் ISI-க்கு உதவி செய்தது, எல்லை பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தகவல்களை கசிய விட்டார். அரசு ஊழியராக இருந்தபோது ரகசியமாக பாகிஸ்தான் சென்றுள்ளார்,” என்றார் பிரதீப் பண்டாரி.
“தீவிரவாதிகளை பாதுகாப்பதும், நாட்டுத் துரோகிகளை தஞ்சமளிப்பதும் தான் காங்கிரசின் உண்மையான முகம்,” என்று X-இல் குறிப்பிட்டார். பாஜகவின் குற்றச்சாட்டுக்கு இதுவரை காங்கிரசிடம் பதில் எதுவும் வரவில்லை.
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “முக்கியமான விசாரணை நடைபெற வேண்டும், தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்,” எனக் கூறினார். மேலும் இதில் உடன் தொடர்புடைய அனைத்து ஆதாரங்களும் விசாரிக்கப்பட வேண்டும். எவரேனும் தொடர்புடையவர்கள் இருந்தால், அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்,” என்றார். மேலும் இவர் ஒருவரை மட்டும் பிடிப்பது போதாது. முழு சங்கிலி கண்டறியப்பட வேண்டும். யாராக இருந்தாலும் கண்டறிந்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்றார் ரதோர்.