காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ புகழ்ச்சியை கடுமையாக விமர்சித்துள்ளது காங்கிரஸ். மூத்த தலைவர் உதித் ராஜ், அவர் சசிதரூரை “பாஜகவின் சூப்பர் பேச்சாளர்” என குற்றம்சாட்டி, அவர் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய அரசுக்கும் ஆதரவாகவே பேசுவதாக கூறினார்.
சசிதரூரின் குழுவில் பாஜக, ஜே.எம்.எம்., தெலுங்கு தேசம், சிவசேனா ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் அடங்கினர். அவர்கள் அமெரிக்கா, கயானா, பனாமா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகம் மற்றும் இந்திய சமூகத்தினருடன் சந்தித்து, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.
பனாமாவில், பாகிஸ்தான் தொடர்ந்தும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது என்றும், 2016-ஆம் ஆண்டு யூரி தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட சர்ஜிகல் ஸ்டிரைக் உள்ளிட்ட வலுவான நடவடிக்கைகளை சசிதரூர் புகழ்ந்தார்.
இந்த பாராட்டை பார்த்து, உதித் ராஜ் அவர் மோடி அரசைத் தொடர்ந்து ஆதரிக்கிறார் எனக் கூறி சசிதரூர் குறித்து விமர்சித்தார். “பாஜகத் தலைவர்கள் வெளிப்படையாக சொல்லாததை சசிதரூரே மோடிக்கும் அவரது அரசுக்கும் ஆதரவாகச் சொல்கிறார்,” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
“இந்தியா யூரி தாக்குதலுக்கு முன்னால் ஒருபோதும் எல்லை தாண்டியதில்லை” என கூறிய சசிதரூரால் சில காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஏனெனில், இது கடந்த காங்கிரஸ் ஆட்சி காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை புறக்கணிப்பதாக இருக்கிறது என்று அவர்கள் கருதுகின்றனர். “ஏன் இப்படி கடந்த காங்கிரஸ் ஆட்சிகளை இகழும் வகையில் சசிதரூர் பேச வேண்டும்?” எனக் கேட்கின்றனர்.
இந்தியா சார்பாக வெளிநாட்டு பயணத்திற்கு சசிதரூர் காங்கிரஸின் முதல் தேர்வாக இருக்கவில்லை என்பது சுவாரஸ்யம். மத்திய அரசு நான்கு பேர் பெயரை கேட்கும்போது, காங்கிரஸ் ஆனந்த் ஷர்மா, கௌரவ் கோகோய், டாக்டர் சயீத் நசீர் ஹுசேன், ராஜா ப்ரார் ஆகியோரை பரிந்துரைத்தது. ஆனால் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் சசிதரூரை தேர்வு செய்தது.
இந்த நிலையில் சசிதரூர் பனாமாவில், பாகிஸ்தானின் தொடர்ச்சியான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு கடுமையான கண்டனத்தை வெளியிட்டார். “சமீபத்திய ஆண்டுகளில் பயங்கரவாதிகள் தாங்கள் விலையை செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்துள்ளனர். இதில் சந்தேகமே இல்லை,” என்றார்.
2016 செப்டம்பரில் யூரி தாக்குதலுக்குப் பிறகு இந்தியா எல்லை கடந்தது முக்கியமான திருப்புமுனை என அவர் குறிப்பிட்டார். கார்கில் போர் சமயத்திலும் இந்தியா LOC-ஐ தாண்டவில்லை, ஆனால் யூரி தாக்குதலுக்கு பிறகு மற்றும் 2019 புல்வாமா தாக்குதலுக்கு பிறகு தீர்வான நடவடிக்கைகளை எடுத்தது எனவும் கூறினார்.