இந்தியா

ஆடுகள் மேய்த்து கொண்டிருந்தவர் இன்று ஐஏஎஸ் அதிகாரி.. விடாமுயற்சிக்கு கிடைத்த பலன்..!

 

இந்தியாவில் மிக கடினமான போட்டி தேர்வாகக் கருதப்படும் UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது பலருக்கும் கனவாகவே மாறி விடுகிறது. ஆனால், மஹாராஷ்டிராவின் கோலாபூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞன், ஆடுகள் மேய்த்துக்கொண்டு படித்து வந்தார். இன்று அவர் IPS அதிகாரி ஆகவிருக்கிறார்.

மகாராஷ்டிராவில் உள்ள யம்கே கிராமத்தை சேர்ந்த பீர்தேவ் சித்தப்பா டோனே, 2024 UPSC தேர்வில் அகில இந்திய தரவரிசையில் 551வது இடம் பிடித்து, தன் குடும்பத்துக்கும் கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அந்த நேரத்தில் அவர் எங்கே இருந்தார் தெரியுமா? கர்நாடக மாநிலம் பெளகாவில், தன் மாமாவின் ஆட்டுகளுக்கு முடி வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர் ஒருவர் மொபைல் அழைப்பில், “நீ தேர்ச்சி பெற்றிருக்கிறாய்!” என்று தகவல் தெரிவித்தார். அதைக் கேட்டதும் மகிழ்ச்சியில் குளித்த பீர்தேவ், முதலில் வேலை முடித்துவிட்டு உறவினர்களிடம் செய்தியை பகிர்ந்தார்.

பீர்தேவின் குடும்பம் ஒரு ஏக்கர் நிலத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளது. ஆடுகள், செம்மறி ஆடுகள் வளர்ப்பதே அவர்களது குடும்பத்தின் ஒரே வருமானம். பீர்தேவ் தனது ஆரம்ப கல்வியை சொந்த ஊரின் மாவட்ட பஞ்சாயத்து பள்ளியில் முடித்தார். பின் புனேயில் சிவில் இன்ஜினியரிங் படித்தார்.

பிறகு டெல்லிக்கு சென்று 2 ஆண்டுகள் UPSCக்கு தயாரானார். முதல் இரண்டு முறைகள் தோல்வி ஏற்பட்டாலும், மூன்றாவது முயற்சியில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றார். எழுத்துத் தேர்வில் 775 மதிப்பெண்கள், உயிரியல் சோதனையில் 160 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 935 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

அவரது வெற்றிக்கு காரணம், அவரது விட முயற்சி மற்றும் மன உறுதி என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ஆடுகளை மேய்க்க செல்லும்போது அவர் புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு செல்வார். ஒருபக்கம் ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கும்போது அவர் ஓரமாக புல்வெளிய்ல் உட்கார்ந்து தேர்வுக்கு படிப்பார். அவரது கடின உழைப்புக்கு இன்று அவருக்கு மிகப்பெரிய அந்தஸ்து கிடைத்துள்ளது. இனி அவருடைய எதிர்காலம் மட்டுமின்றி அவரது பரம்பரையே கெளரவமாக அந்தஸ்தாக வாழும் என்பது குறிப்பிடத்தக்கது.

Avatar photo
Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.