மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இயங்கும் மெட்ரோ ரயில் திட்டம், போதிய பயணிகள் இன்றி காலியாக இயங்கி வரும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, நாளொன்றுக்கு லட்சக்கணக்கில் பராமரிப்பு செலவு ஆகும் இந்த மெட்ரோ ரயிலில், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான பயணிகளே பயணிக்கின்றனர்.
நாட்டின் சில பகுதிகளில் திட்டமிடலின்றி உருவாக்கப்படும் இத்தகைய உள்கட்டமைப்பு திட்டங்கள், மக்கள் வரியை வீணடிக்கும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது. பயணிகள் நடமாட்டமே இல்லாத ஒரு வழித்தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்கி வருவது, மத்திய அரசின் தொலைநோக்கற்ற திட்டமிடலையே வெளிப்படுத்துகிறது.
மறுபுறம், தமிழ்நாட்டின் முன்னணி தொழில் நகரமான கோயம்புத்தூரின் மெட்ரோ ரயில் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருப்பது தென்னிந்திய மாநிலங்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் வர்த்தகர்கள் தினமும் பயணிக்கும் கோயம்பத்தூர் போன்ற அதிக போக்குவரத்து நெருக்கடி நிறைந்த நகரத்திற்கு மெட்ரோ திட்டம் மிகவும் அவசியமான ஒன்றாகும். இருப்பினும், நிதி ஒதுக்கீடு மற்றும் மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதில் தொடர் காலதாமதம் ஏற்படுவது, கொங்கு மண்டல மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிராகரிப்பதாகவே அமைந்துள்ளது.
சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற தென்னிந்திய பெருநகரங்களில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு அனுமதி கோரும் கோரிக்கைகள் பல ஆண்டுகளாக தாமதிக்கப்பட்டு வருகின்றன. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்கான ஒன்றிய அரசின் நிதிப் பங்கீட்டைப் பெறுவதற்கே பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. அதேபோல், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களின் விரிவாக்கப்பட்ட மெட்ரோ திட்டங்களுக்கான ஒப்புதல்களும் பல்வேறு கட்டக் தடைகளைத் தாண்டியே பெற வேண்டிய சூழல் நீடிக்கிறது.
தென்னிந்திய பெருநகரங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் வரி வருவாயை வழங்கி வருகின்றன. ஆனால், அந்த நகரங்களின் அடிப்படை உள்கட்டமைப்புத் தேவைகளான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் மத்திய அரசு காலம் கடத்தும் போக்கு தொடர்கிறது. பொருளாதாரப் பங்களிப்பில் முன்னணியில் இருக்கும் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கோவை போன்ற நகரங்கள் புறக்கணிக்கப்பட்டு, பயணிகள் நடமாட்டமே இல்லாத பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது பெரும் அரசியல் முரண்பாடாக உருவெடுத்துள்ளது.
போபால் மெட்ரோவில் பயணிகள் இல்லாமல் ரயில்கள் காலியாக ஓடுவதும், அதே நேரத்தில் தினமும் பல லட்சம் பயணிகள் நெரிசலில் அவதிப்படும் தென்மாநில நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்கள் மறுக்கப்படுவதும் அல்லது தாமதிக்கப்படுவதும் நிதி ஒதுக்கீட்டில் உள்ள பாரபட்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நகர்ப்புறப் போக்குவரத்துக்கான நிதியைப் பகுத்தறிவுடனும், உண்மையான தேவை மற்றும் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் ஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியமாகும். இத்தகைய தவறான முன்னுரிமைகள் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கே பாதகமாக அமையும்.
எனவே, மத்திய அரசு அரசியல் மற்றும் மண்டல பாரபட்சங்களைக் கடந்து, நாட்டின் பொருளாதார எஞ்சின்களாகச் செயல்படும் தென்னிந்திய நகரங்களின் கட்டமைப்புத் தேவைகளுக்கு உடனடியாக ஒப்புதலும் நிதியும் வழங்க வேண்டும். கோயம்புத்தூர் மெட்ரோ திட்டத்தை விரைந்து முடிப்பதோடு, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களின் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கான தடைகளை உடனே நீக்க வேண்டும். உண்மையான மக்கள் தேவையை உணர்ந்து திட்டங்களைச் செயல்படுத்துவதே நாட்டின் வரிப்பணத்தை சரியான முறையில் பயன்படுத்தும் சிறந்த வழிமுறையாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
