ராணாவை நீதியின் முன் நிறுத்துவோம்.. பிரதமர் ஆகும் முன்பே சவால் விட்ட மோடி.. 2011 ட்வீட் வைரல்..!

  மும்பை தாக்குதல் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் தஹாவூர் ராணா நேற்று நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், மோடி ஆட்சியில் தான் இது சாத்தியமானது என்று உயர் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.…

modi rana

 

மும்பை தாக்குதல் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் தஹாவூர் ராணா நேற்று நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், மோடி ஆட்சியில் தான் இது சாத்தியமானது என்று உயர் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய பிரதமராக மோடி இல்லாத போதே, “ராணாவை இந்தியாவுக்கு அழைத்து வந்து நீதியின் முன் நிறுத்துவேன்” என மோடி கூறிய வார்த்தைகள் தற்போது உண்மையாகி உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

2008 ஆம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலில் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணா, பாகிஸ்தான் மற்றும் கனடா குடியுரிமை பெற்றிருந்தார். அவர் ஒரு வழக்கிற்காக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தியா அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மும்பை தாக்குதலில் தொடர்புடையவர் என்றும் கோரிக்கை விடுத்தது.

ஆனால் சிகாகோ நீதிமன்றம் மும்பை தாக்குதல் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து, “ராணா குற்றமற்றவர்” என தீர்ப்பளித்தது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடுமையாக கருத்து தெரிவித்தார்.

“இந்திய இறையாண்மையை அவமதிக்கும் வகையில் அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது”, என்றும் “இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு பெரும் பின்னடைவு” என்றும் தனது ட்வீட்டில் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி, அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றம் ஒரு பயங்கரவாதியை விடுவித்துள்ளது; இது உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் அனைத்து சக்திகளுக்கும் ஒரு கேள்விக்குறியாக உள்ளது” என்றும் கூறினார்.

“எதை அடிப்படையாக கொண்டு சிகாகோ நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது? யார் விசாரணை செய்தனர்? அவர்களின் பங்கு என்ன? பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை வழங்கப் போவது யார்?” என்று அடுத்தடுத்து கேள்வி எழுப்பியிருந்தார்.

அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் கூட இந்த தீர்ப்பு குறித்து கருத்து சொல்லாத நிலையில், ஒரு மாநில முதலமைச்சராக இருந்த மோடி அமெரிக்காவின் தீர்ப்பை எதிர்த்து ஆவேசமாக பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், “ராணாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நாள் நிச்சயம் வரும்” என்றும் அவர் ஊடகத்திடம் சவால் விடுத்திருந்தார். அந்த சவால் இன்று நிறைவேறி உள்ளது.

ராணாவை அமெரிக்கா நாடு கடத்தி உள்ள நிலையில், இன்று அவர் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, கண்டிப்பாக நீதியின் முன் நிறுத்தி, மும்பை பயங்கரவாத குற்றத்திற்காக உரிய தண்டனையையும் ராணாவுக்கு மோடி பெற்று தருவார் என்று மூத்த அதிகாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.