உயிர் காக்கும் வகையில் உதவி செய்பவர்களுக்கு அதாவது உடலுறுப்பு தானம் செய்பவர்களை கெளரவிக்கும் வகையில் ஒரு முக்கிய நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. உடலுறுப்பு தானம் செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம், தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்ற அமைப்பான NOTTOவின் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்படும் தீவிர சிகிச்சை மற்றும் ஓய்வு தேவைகளை கருத்தில் கொண்டு, தானம் செய்பவர்களுக்கு முழுமையான ஓய்வு அளிக்க இந்த விடுப்பு வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் குறித்து இன்னும் கொஞ்சம் விரிவாக பார்ப்போம். அதாவது உடலுறுப்பு தானம் செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 42 நாட்கள் சிறப்பு சாதாரண விடுப்பு வழங்கப்படும். அறுவை சிகிச்சைக்கு முந்தைய ஆய்வுகள், மருத்துவமனையில் அனுமதிப்பு மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய ஓய்வு ஆகிய அனைத்தும் இந்த விடுப்பின் கீழ் உள்ளடக்கப்படும். இதற்கான உத்தரவை தொகுதி பணியாளர் மற்றும் பயிற்சித்துறை (DoPT) வெளியிட்டு, NOTTO இணையதளத்திலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
NOTTO இயக்குனர் டாக்டர் அனில் குமார் இந்த திட்டம் குறித்து கூறும்போது, “தானம் செய்வதற்காக உடலுருப்பு அகற்றம் என்பது பெரிய அறுவை சிகிச்சை என்பதால், அறுவை சிகிச்சைக்கு பின் முறையான ஓய்வு மிக அவசியம். எனவே எந்த உறுப்பு தானம் செய்தாலும் இந்த 42 நாட்கள் விடுப்பு பொருந்தும். ஆனால் விடுப்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாளில் இருந்து தொடங்க வேண்டும். டாக்டரின் பரிந்துரை இருந்தால் அறுவை சிகிச்சைக்கு ஒரு வாரம் முன்னதாகவே விடுப்பு வழங்க அனுமதி அளிக்கப்படும்.
சிறுநீரகம், கல்லீரல், போன்ற உறுப்புகள் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யக்கூடியவை என்பதால் இவை இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, தானம் செய்பவர்களின் தன்னலமற்ற செயலை மதிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் உடல், மன அழுத்தம் இல்லாமல் சிகிச்சை பெறவும் உதவுகிறது. இது அரசு ஊழியர்களிடையே உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை போல் இன்னும் பொது சுகாதார திட்டங்களுக்கும் எதிர்காலத்தில் இதே போன்ற சில அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.