உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காஜியாபாத்தில், இரண்டு சகோதரிகள் வெறும் ஒரு லட்ச ரூபாயில் ஆடையில் கையால் எம்பிராய்டரி செய்யும் தொழிலை ஆரம்பித்த நிலையில், இன்று அவர்களது நிறுவனத்தின் மதிப்பு 5 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், கொரோனா தாக்கம் ஆரம்பித்த நிலையில் தான், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காஜியாபாத் பகுதியில் உள்ள அக்கா-தங்கைகளான அனுஜா மற்றும் பிரதிக்ஷா சகோதரிகள் “சௌகத்” என்ற நிறுவனத்தை தொடங்கினர்.
இந்த நிறுவனம், லக்னோவில் உள்ள பிரபலமான கையால் செய்யப்படும் எம்பிராய்டரி கலாச்சாரத்தை மையமாகக் கொண்டது. வெறும் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் தங்களது வீட்டிலேயே தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது மிகப்பெரிய அளவில், 5 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள நிறுவனமாக வளர்ந்து உள்ளது.
தங்கள் பெற்றோருக்கு தாங்கள் இரண்டு பெண் குழந்தைகள் என்பதால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கேலியும், கிண்டலும் செய்தார்கள் என்றும், ஆனால் ஒருபோதும் தங்களை பெற்றோர் விட்டுக் கொடுக்கவில்லை என்றும், எங்களை நன்றாக படிக்க வைத்தார்கள் என்றும் அனுஜா மற்றும் பிரதிக்ஷா சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் அனுபவம் பெற்ற அனுஷா மற்றும் பிரதிக்ஷாவின் பேஷன் டிசைன் பின்னணி ஆகிய இரண்டும் சேர்ந்துதான், இந்த நிறுவனத்தை மிகப்பெரிய நிறுவனமாக உருவாக்கியுள்ளது.
நிறுவனம் தொடங்கிய சில நாட்களிலேயே கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக லாக்டவுன் ஏற்பட்டு விட்டாலும், இன்ஸ்டாகிராம் வழியாக விளம்பரத்தில் வெற்றி கண்டதால், அவர்களுடைய ஸ்டாக் 20 நாட்களில் தெரிந்து விட்டதாக அனுஜா தெரிவித்துள்ளார்.
தங்களது நிறுவனத்தின் ஆடையில், கையால் எம்பிராய்டரி செய்வது மட்டுமே ஊக்குவித்ததாகவும், இதற்காக லக்னோவில் இருந்து சில பெண்களை வேலைக்கு ஆள் எடுத்ததாகவும், கலை அம்சத்துடன் கையால் செய்யப்பட்ட எம்பிராய்டரிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது என்றும் இந்த சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது எம்பிராய்டரிக்கு மெஷின்கள் வந்துவிட்டாலும், கையால் செய்யப்படும் எம்பிராய்டரிக்கு ஈடு இணை இல்லை என்றும், இந்நிறுவனத்தில் தற்போது 45 பேர் வேலை செய்யும் நிலையில், அதில் 40 பேர் பெண்கள் என்றும், பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் சேவையை தாங்கள் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கிராமப்புற பெண் கலைஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடும், பாரம்பரிய கலையை வாழ வைக்கும் ஒரு அம்சமாகவும் இந்த நிறுவனம் விளங்குகிறது. நவீன டிஜிட்டல் யுகத்தில், வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், தங்கள் நிறுவனம் இந்திய பாரம்பரியத்துடன் செயல்பட்டு வருவதாகவும், எந்த காரணத்தையும் முன்னிட்டு தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் கைவினைஞர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மிஷின்களை நாங்கள் பயன்படுத்த மாட்டோம் என்றும் இந்த சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.
வெறும் ஒரு லட்ச ரூபாயில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம், தற்போது 5 கோடி ரூபாய் நிறுவனமாக வளர்ந்துள்ள நிலையில், இன்னும் மிகப்பெரிய அளவில் இந்த நிறுவனத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் தங்கள் கனவு என்று தெரிவித்துள்ளனர்.
எம்பிராய்டரி கலை தெரிந்த கைவினைஞர்கள் பலர் தங்களது மதிப்பு தெரியாமல் உள்ளனர் என்றும், அவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதுதான் தங்கள் லட்சியம் என்றும் இந்த சகோதரிகள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளனர்.