இந்திய அளவில் மிகப்பெரிய போட்டித் தேர்வாக இருக்கும் நீட் UG தேர்வில் முதலிடம் பிடிப்பது ஏற்கனவே கடினமான ஒன்று. லட்சக்கணக்கான மாணவர்கள், குறைந்த எண்ணிக்கையிலான எம்பிபிஎஸ் இருக்கைகளுக்காக போட்டியிடும் சூழலில், வெற்றி பெற கல்வி திறமை மட்டும் போதாது , ஒருமித்த மனம், தொடர்ச்சியான முயற்சி மற்றும் திட்டமிட்ட பயிற்சி எல்லாம் தேவைப்படும்.
இத்தனைக்கும் நடுவே, கோவா மாநிலத்தின் பனாஜி நகரை சேர்ந்த அனுஷ்கா ஆனந்த் குல்கர்னி, 2023 ஆம் ஆண்டில் 720 இல் 705 மதிப்பெண்கள் எடுத்து, இந்திய அளவில் 24-வது இடத்தை பிடித்து, தற்போது AIIMS டெல்லியில் MBBS படித்து வருகிறார்.
அவளுடைய வெற்றிக்கான ரகசியம் நேரத்தை அதிகம் செலவழித்ததல்ல, நுட்பமான திட்டமிடல் மற்றும் தனிப்பட்ட பலவீனங்களை புரிந்து வைத்து அதற்கேற்ப படிப்பதைச் சேர்த்து அமைத்தது. 9-ம் வகுப்பிலிருந்தே கோச்சிங் உதவியுடன் அறிவியல் அடித்தளத்தை உறுதியாக கட்டியதால், பின்னர் நீட் பாடங்களை ஆழமாக படிக்க வாய்ப்பு கிடைத்தது.
கொரோனா காலத்திலும், ஆன்லைன் வகுப்புகளிலேயே தொடர்ந்தும் தேர்வுக்கான தயாரிப்பைத் தடை இல்லாமல் செய்து வந்தார். வழக்கமான பள்ளி நாட்களில் தினசரி 2 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை நீட் படிப்புக்காக ஒதுக்கினார். விடுமுறைகளில் இந்த நேரம் கூடிக் கொண்டது. “நேரம் எவ்வளவு படிக்கிறோம் என்பது முக்கியமல்ல, அந்த நேரத்தை எவ்வாறு பயனுள்ளதாக செலவழிக்கிறோம் என்பதுதான் முக்கியம்” என்கிறார் அனுஷ்கா.
மீண்டும் மீண்டும் வாசிக்கும் முறைகள், மாடல் தேர்வுகள், மற்றும் வழக்கமான ஒழுங்குமுறை ஆகியவை அவரை வெற்றிக்கு இட்டுச்சென்றன. அந்த காலத்தில் ஆசிரியர்களும், வழிகாட்டிகளும் அவருக்கு உறுதுணையாக இருந்தனர்.
அனுஷ்காவுக்கு மருத்துவம் படிக்க ஆசையை ஏற்படுத்தியவர்கள் அவரது குடும்பமே. பெற்றோர்கள் வீணா மற்றும் ஆனந்த் குல்கர்னி, கல்வி, உணர்ச்சி ஆதரவு என அனைத்திலும் பக்கபலமாக இருந்தனர். “எந்த நேரத்திலும் எனது பாதையை நான் தவறவிடவில்லை, அதற்குக் காரணம் என் குடும்பம்” என உருக்கமாக அனுஷ்கா கூறுகிறார்.
இப்போது AIIMS டெல்லியில் MBBS படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் அனுஷ்கா, கோவா மட்டுமல்ல, நாடெங்கிலும் மாணவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளார். அவரின் பள்ளி முதல்வர், இது கோவாவுக்கு பெருமையான தருணம் எனக் கூறியுள்ளார்.
நீட் தேர்வில் வெற்றி பெற வெறித்தனமாகப் படிப்பது தேவை இல்லை, திட்டமிட்ட உழைப்பு, சமநிலை மற்றும் உறுதுணையாக இருக்கும் குடும்பமே முக்கியம் என்பதை அனுஷ்காவின் கதை நமக்குச் சொல்கிறது.