தேசிய நல்லாசிரியர் விருது.. தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு

By John A

Published:

பெற்றோருக்கு அடுத்த படியாக இளைய தலைமுறையை வளர்த்தெடுக்கும் முக்கியப் பணியில் ஈடுபட்டு அவர்களின் நலன் காக்க, கல்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கி, அவர்களை சமுதாயத்தில் சிறந்த மனிதர்களாக உருவாக்கும் முக்கியப் பொறுப்பே ஆசிரியர்களின் பணி. இப்படிப்பட்ட புனிதமான பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களை ஒவ்வொரு ஆண்டும் நல்லாசிரியர் விருது வழங்கி மத்திய அரசும், மாநில அரசும் கௌரவிக்கிறது.

அதன்படி, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான சர்வபள்ளி. டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் கல்விப் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு அவரின் பிறந்த நாளான செப்டம்பர்.5-ல் அவர்பெயரில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம். தேசிய அளவிலும், மாநில அளவிலும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கடந்த ஜுன் மாதம் நாடு முழுவதிலுமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்தும் பல ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். தற்போது நாடு முழுவதும் 50 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகி உள்ளனர். இதில் தமிழகத்திலிருந்து இரண்டு ஆசிரியர்கள் தேர்வாகி இருக்கின்றனர்.

Airport விதிகள்: விமானத்தில் எவ்வளவு பணம் ரொக்கமாக எடுத்துச் செல்லலாம் தெரியுமா…?

வேலூர் மாவட்டம் ராஜகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத் மற்றும் மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முரளிதரன் ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதினைப் பெற உள்ளனர். செப்டம்பர் 5-ல் தலைநகர் டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நல்லாசிரியர்களுக்கு வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ. 50,000 வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வான ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசியிலும், தனது எக்ஸ் தளப் பக்கத்திலும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகமெங்கும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

மேலும் உங்களுக்காக...