இந்தியாவுக்கு யாரும் விரோதம் இல்லை.. விரோதமாக யாரும் நடந்தால் பாடம் கற்பிப்போம்: மோகன் பகவத்

  ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற விழாவில், ஆர்.ஆர்.எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றியபோது, ‘இந்தியாவின் வலிமை, ஒற்றுமை, மற்றும் மாற்றத்தை கொண்டு வரும் பாரம்பரியம் குறித்து பேசினார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் பின்னணியில், இந்தியாவின்…

mohan

 

ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற விழாவில், ஆர்.ஆர்.எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றியபோது, ‘இந்தியாவின் வலிமை, ஒற்றுமை, மற்றும் மாற்றத்தை கொண்டு வரும் பாரம்பரியம் குறித்து பேசினார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் பின்னணியில், இந்தியாவின் உரிமையை சவால் செய்யும் நாடுகளுக்கு அவர் உறுதியான செய்தியை வழங்கினார்.

’100 ஆண்டுகளாக, ஆர்.ஆர்.எஸ் இந்தியாவின் தேசிய அடையாளம் மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கு பெரும் பங்களிப்பு அளித்து வருகிறது. அறிவை பரப்பும் சன்னியாசிகள் போலவே, ஆர்.ஆர்.எஸ் அமைப்பில் உள்ளவர்கள் தங்கள் நேரத்தை சங்கத்தின் பணிக்காக அர்ப்பணிக்கின்றனர். இது தான் தன்னலமற்ற சேவை.”

“இந்தியாவுக்கு எவருடனும் விரோதம் இல்லை. ஆனால் யாராவது இந்தியாவிற்கு எதிராக விரோதமாக நடந்து கொண்டால், அவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் வலிமை இந்தியாவுக்கு உள்ளது.”

“இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும், அதற்கான வலிமையும் வழியும் இருக்கிறது. நம் நாட்டின் வளர்ச்சி பயணம் தொடர வேண்டும். விவேகானந்தரின் சிந்தனைகள் இந்திய மக்களிடம் உள்ளது.

“ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு குறிக்கோள் உள்ளது. இந்தியாவின் பணி என்பது மனித குலத்தை உயர்த்துவதும், அதன் மதிப்புகள் மற்றும் ஞானத்தின் வழியே வழிகாட்டுவதும்.”

“இந்தியாவின் பார்வை, அனைவரும் ஒன்றே; அனைவரும் நமதே. யாரும் வெளியாள் அல்ல, நம்மில் அனைவரும் இருக்கிறோம்; அனைவரிலும் நாம் இருக்கிறோம். எனவே, ஒருவருக்கொருவர் சேவை செய்து, அந்த ஒற்றுமையை அடையுங்கள்.”

“இந்தியா இப்போது எதை செய்கிறதோ, அதை மிகச் சிறப்பாகச் செய்கிறது. நம் முன்னேற்ற பாதையை உறுதியாக தொடர வேண்டும். நாட்டின் பாரம்பரியங்கள், மதிப்புகள், உலக பார்வையை வலியுறுத்தி கொண்டு, வெளிப்புற சவால்களுக்கு துணிந்து எதிர்கொண்டு, தன் விதியைத் தானே நிர்ணயிக்க தயாராக இருக்கிறது.” என்று பேசினார்.

ஜெய்ப்பூரில் ஆர்.ஆர்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசிய இந்த உரை, பார்வையாளர்களிடம் பெரும் உணர்ச்சியையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்தியா தன்  பாரம்பரியத்தில் உறுதியாய் நின்று, உலகில் தன் இடத்தை உறுதியாக வகிக்க தயாராக உள்ளது என்னும் செய்தியை  உறுதியாக்கியது.