இந்திய-நேபாள எல்லையில் நேற்று இரவு நேபாளத்திற்குள் நுழைய முயன்ற ஈராக் நாட்டை சேர்ந்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்டவர், பாக்தாத்தின் அல் டோரா பகுதியை சேர்ந்த பாரா ஃபவுசி ஹமித் அல் பயாதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், காலாவதி ஆன விசாவுடன் கடந்த ஜூன் 16 முதல் இந்திய பகுதியில் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது. இவ்வளவு நாட்களாக அவர் எப்படி நாட்டிற்குள் இருந்தார், ஏன் கண்டறியப்படவில்லை என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அல் பயாதி, காத்மாண்டுவிலிருந்து சவுதி அரேபியாவுக்கு விமானம் பிடிப்பதற்காக நேபாளத்திற்குள் நுழைய முயன்றபோது, அவரது நடத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியதால் ரக்சால் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டார் என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹாரையா காவல் நிலையத்தின் அதிகாரி கிஷன் குமார் பாஸ்வான், அல் பயாதியிடம் இந்தியாவுக்குள் நுழைய எந்தவிதமான முறையான ஆவணங்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். தன்னை ஒரு பொறியாளர் என்று அவர் கூறினாலும், அவரது உண்மையான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை. அவர் உண்மையில் மென்பொறியாளரா? அல்லது தீவிரவாதி கும்பலை சேர்ந்தவரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த வெளிநாட்டு பிரஜை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரிடம் மாநில மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள், அதாவது இராணுவ புலனாய்வு, புலனாய்வு பணியகம், மற்றும் RAW போன்ற முக்கிய அமைப்புகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வட்டாரத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரக்சால் எல்லைக்கு அருகே ஐந்து சீன குடிமக்கள் மற்றும் ஒரு அமெரிக்கர் உட்பட ஆறு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வரவிருக்கும் அக்டோபர்-நவம்பர் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பீகாரில் உள்ள இந்தியா-நேபாள எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன. பீகார் காவல்துறை தலைமை இயக்குநர் விஜய் குமார் சமீபத்தில் சர்வதேச எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு நிலவரத்தை ஆய்வு செய்ததும் குறிப்பிடத்தக்கது.