வட இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், அவர் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு ஆட்டோ லேசாக உரசியது. இதையடுத்து வண்டியை நிறுத்திய அந்த பெண், ஆட்டோ டிரைவரை சரமாரியாக திட்டியதுடன், தனது காலில் அணிந்த செருப்பை எடுத்து, ஆட்டோ டிரைவரை அடித்தார்.
இந்த சம்பவத்தை ஆட்டோ டிரைவர் லோகேஷ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். அது மட்டுமின்றி, காவல் நிலையத்தில் புகாரும் அளித்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி செய்தனர்.
இந்த நிலையில், இன்று திடீரென ஆட்டோ டிரைவரின் வீட்டுக்கே வந்த அந்த பெண்ணும் அவருடைய கணவரும், ஆட்டோ டிரைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். “நான் கர்ப்பமாக இருக்கிறேன். நான் செய்தது தவறுதான், தெரியாமல் செய்துவிட்டேன். பெங்களூரு மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. கன்னட மக்கள் மீது மதிப்பு, மரியாதை வைத்துள்ளேன். நான் தெரியாமல் செய்த தவறை மன்னிக்க வேண்டும்,” என்று அந்த பெண் கூறினார்.
அவருடைய கணவரும் காலில் விழுந்தார். இது குறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும், “நான் தற்போது அற்பமாக இருக்கிறேன். ஆட்டோ வண்டியின் மீது மோதி, நான் கீழே விழுந்து, எனக்கும் என்னுடைய குழந்தைக்கும் ஏதாவது ஆகிவிட்டால் என்ன? என்று பயந்து தான் அந்த டென்ஷனில் பேசி விட்டேன். எனக்கு கன்னட மக்கள் மீது எந்த வெறுப்பும் இல்லை. எனக்கு பெங்களூரும் அதன் கலாச்சாரமும் மிகவும் பிடிக்கும்,” என்று அந்த வீடியோவில் அவர் தெரிவித்தார்.
ஆட்டோக்காரரும் அந்த பெண்ணை மன்னித்துவிட்டதாக தெரிகிறது. இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.