ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பாராட்டாத, பாலிவுட் நடிகர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்ட கொல்கத்தாவை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஷர்மிஸ்தா பனோலி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து நீதிபதி சாரதி சட்டர்ஜி உத்தரவு பிறப்பித்தார்.
இதனை அடுத்து “அவருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்” என்பது போன்ற ‘X’ பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த நிலையில், மாணவியின் கருத்து காரணமாக பலரும் மனம் புண்பட்டனர். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடும் முன், அவர் பல வகையில் யோசித்திருக்க வேண்டும் என்று கூறி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
அதன் பின்னர் தான் ‘X’ சமூக வலைதளத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாணவி மன்னிப்பு கேட்டும், அந்த வீடியோவை அகற்றியும் உள்ளார். அதன் பிறகும் ஏன் இவ்வளவு வன்மம்? அந்த மாணவியை ஜாமீனில் கூட வெளியே வர விட மறுக்கிறார்கள் என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நீதிபதிக்கு கண்டனம் தெரிவித்து, “இது போன்ற நீதிபதிகள் இந்தியாவுக்கு ஆபத்தானவர்கள்; அவர்களை தான் முதலில் சமாளிக்க வேண்டும்,” என்று ஒரு எக்ஸ் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அவருடைய முகவரி யாருக்காவது தெரியுமா?” என்று ஒருவர் கேட்டு பயமுறுத்தியுள்ளார்.
ஏராளமான மிரட்டல்கள் நீதிபதிக்கு வந்ததை அடுத்து, முன்னணி ஊடகம் ஒன்று அந்த மிரட்டல் விடுத்த கணக்குகளை எல்லாம் ஆய்வு செய்ததில், அனைத்தும் போலி கணக்குகள் என தெரிய வந்துள்ளது. பெரும்பாலான கணக்குகள் மே மாதத்தில் தான் தொடங்கப்பட்டுள்ளன என்றும், நீதிபதியை விமர்சிக்கவே சில புதிய கணக்குகள் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒரு கணக்கிலும் உண்மையான பெயர் மற்றும் முகவரி இல்லை என்றும், அனைத்தும் போலியானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய போலி கணக்குகள் தொடங்கி, நீதிபதியை மிரட்டும் அளவுக்கு சமூக வலைதளம் மிகவும் ஆபத்தான தளமாக இருக்கிறது என்று விமர்சனம் செய்யப்படுகிறது.