உங்களுடைய நாளினை நடைப்பயிற்சியுடன் தொடங்குவதால் இத்தனை நன்மைகளா???

Published:

காலையில் கண்விழித்ததும் பலருக்கு படுக்கையை விட்டு எழவே மனம் வராது. காலை எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாலும் காலையில் கண்விழித்ததும்  நாளையில் இருந்து பார்த்துக் கொள்ளலாம் என்ற சோம்பல் சிலரை ஆக்கிரமித்து விடும். அந்த சோம்பலையும் மீறி காலைப்பொழுதில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் பலவிதமான நன்மைகளை பெறலாம்.

காலை நேர நடைப்பயிற்சியால் விளையும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்:

walking 2

1. நடைப்பயிற்சியுடன் அந்த நாளினை தொடங்கும் பொழுது அது முழு நாளையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள தேவையான ஆற்றலை தருகிறது. வீட்டிற்குள் நடைப்பயிற்சி செய்வதை விட வீட்டிற்கு வெளியே ஒரு 20 நிமிடம் நடப்பதால் கூடுதல் நன்மைகள் கிடைக்கிறது. மாடிப்படியில் ஒரு பத்து நிமிடம் ஏறி இறங்கி நடை பயிற்சி செய்பவர்களுக்கு ஒரு கப் காபி குடிப்பதனால் கிடைக்கும் புத்துணர்ச்சி கிடைப்பதாக கூறுகிறார்கள்.

2. தினமும் காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு மனநிலை நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். தேவையற்ற பதற்றம், மன அழுத்தம் ஆகியவை குறைந்து மன அமைதி கிடைக்கும்.

3. அமெரிக்காவைச் சேர்ந்த உடல் இயக்க செயல்பாடுகளைப் பற்றிய ஆய்வு நிறுவனம் ஒரு வாரத்திற்கு 150 முதல் 300 நிமிடங்கள் ஒரு மனிதன் தன்னுடைய உடல் இயக்கத்திற்கு செலவழிக்க வேண்டும் என்று கூறுகிறது. இதன் படி பார்த்தால் ஒரு நாளில் 30 நிமிடங்கள் காலை பொழுது நடைப்பயிற்சிக்கு செலவிடும் பொழுது நம் உடல் நல்ல உடலியக்க நிலையில் இருக்கும்.

4. காலை நேர நடைப்பயிற்சி உடல் எடையை குறைத்திட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிச்சயமாக கை கொடுக்கும். மிதமான வேகத்தில் 30 நிமிடங்கள் நடப்பதால் 150 கலோரிகள் வரை எரித்திடலாம்.

walking 1

5. நடைப்பயிற்சி ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. இது இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை 19% வரை குறைத்திடும். சர்க்கரை நோய், இரத்த அழுத்த குறைபாடு ஆகியவற்றை சரி செய்கிறது.

6. உடலில் உள்ள தசைகளை வலுப்படுத்துகிறது. குறிப்பாக மிதமான வேகத்தில் ஆரம்பித்து அதன் பின் விறுவிறுப்பாக நடக்கும் பொழுது காலில் உள்ள தசைகள் நன்கு வலுப்பெறும்.

7. காலை நேர நடை பயிற்சி மன ஆற்றலை மேம்படுத்துவதால் நாள் முழுவதும் நாம் செய்யும் வேலைகளில் நல்ல கவனத்துடன் இருக்க முடியும். மேலும் அறிவாற்றலை அதிகரிக்க மூளையை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.

8. தூக்கமின்மை பிரச்சனையால் தவிப்பவர்களுக்கு நடைப்பயிற்சி நல்ல தீர்வு. நடைப்பயிற்சி தினமும் மேற்கொள்பவர்களுக்கு இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கம் வருவதாக தெரிவிக்கிறார்கள்.

9. நடைபயிற்சி செய்பவர்களுக்கு உடலில் அதிக தண்ணீர் தேவைப்படும். இதனால் தண்ணீர் அதிகம் பருகுவது, பழங்கள், நட்ஸ்களை ஆற்றலுக்காக உண்ண தொடங்குவது போன்று அவர்களை அறியாமலேயே ஒரு ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கத்திற்கும் பழகத் தொடங்கி விடுவார்கள்.

இப்படி பல நன்மைகளைத் தரும் காலை நேர நடை பயிற்சி உங்களுக்கு தனியாக செல்ல அலுப்பாய் தோன்றினால் உங்கள் நண்பர்களுடனோ அல்லது உங்கள் குடும்பத்தார் யாரையாவது துணையாக கொண்டோ பேசிக்கொண்டே சென்றால் அதிக களைப்பும் அடையாமல் நடை பயிற்சியை மேற்கொள்ளலாம். காலையில் நேரம் இல்லை என்று நினைப்பவர்கள் உங்கள் பள்ளிக்கோ, அலுவலகத்திற்கோ செல்கையில் கூடுமானவரை நடந்து செல்லக்கூடிய தூரம் என்றால் நடந்து செல்ல பழகலாம்.

மேலும் உங்களுக்காக...