உலகநாயகன் கமல்ஹாசனும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் தமிழ்த்திரை உலகில் இருபெரும் ஜாம்பவான்கள் என்பது நமக்குத் தெரியும். இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் ஒன்றாகவே நடித்தார்கள். கமல் நடித்த பெரும்பாலான படங்களில் ரஜினி வில்லனாக நடித்தார்.
இருவரது நடிப்பும் அட்டகாசமாக இருக்கும். ஒருவருக்கொருவர் தனித்தனி ஸ்டைலுடன் நடித்து அசத்தி இருப்பார்கள். இது ரசிகர்களை ரொம்பவே ரசிக்க வைத்தது. ஒரு கட்டத்தில் கமல் ரஜினியிடம் நாம் இருவரும் சேர்ந்து நடிப்பது நல்லது கிடையாது.
அது நம் வளர்ச்சியைப் பாதிக்கும். இனி நீங்கள் தனியாக நடித்து உங்கள் திறமையை நிலைநாட்டுங்கள். அது தான் உங்களுக்கு வளர்ச்சியைத் தரும் என்று அறிவுரை கூறினார்.
எந்த ஒரு நண்பன் தன் நண்பனும் நல்லா இருக்கணும்னு அறிவுரை கூறுகிறானோ அவன் தான் உண்மையான நண்பன். அந்த வகையில் கமல் சொன்னதைத் தட்டாமல் ரஜினியும் தனியாக நடித்து திரையுலகில் கோலூச்சி சூப்பர்ஸ்டார் ஆனார்.
ரஜினியும், கமலும் ஆருயிர் நண்பர்கள். திரையில் தான் அவர்களுக்குள் போட்டி உண்டு. ஆனால் பொறாமை இல்லை. அது ஆரோக்கியமான போட்டி. இருவருக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர்களுக்கு இடையே கருத்து மோதல்கள் அவ்வப்போது வருவதுண்டு.
அந்த வகையில் கமலுக்கும், ரஜினிக்கும் உள்ள சில வித்தியாசங்களை பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார். என்னவென்று பார்க்கலாமா…
கமல், ரஜினி ரெண்டு பேருமே தங்களை அறிந்தவர்கள். கமலுக்குத் தன்னால் எல்லாம் முடியும்கறது தெரியும். ரஜினி அதுக்கு அடுத்த ஸ்டெப். தன்னால என்னென்ன முடியாதுங்கறது தெரியும்.
ஒரு மனுஷன் பலத்தால ஜெயிக்கறதை விட தன்னோட பலவீனத்தை அறிஞ்சி செயல்படும்போது அதிகமா ஜெயிப்பான். அதுதான் நான் ரஜினிக்கிட்ட பார்த்தது.
கமலைப் பற்றி சொல்லணும்னா அவரே ஒரு தடவை இப்படி சொல்லிருக்காரு. சினிமாவைப் பிரிக்கணும்னா சிவாஜிக்கு முன் சிவாஜிக்குப் பின் அப்படின்னு சொல்லிருக்காரு.
நான் என்ன சொல்றேன்னா சிவாஜிக்குப் பின் இருக்குறதைப் பிரிக்கணும்னா கமலுக்கு முன் கமலுக்குப் பின்… அப்படின்னு சொல்லலாம். அப்படி ஒரு நடிகர். அதுல எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கமல், ரஜினி இருவருமே இன்று வரை கதாநாயகர்களாக நடித்து தமிழ்சினிமாவில் இன்னும் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் அது ஆச்சரியமான விஷயம் தான்.