மிரட்டல் வில்லன் நடிகருக்கு வந்த டூயட் சாங்.. மெலடியில் வருடிய கே.ஜே.யேசுதாஸ்!

Published:

தமிழ் சினிமாவில் நடிகவேள் என்றழைக்கப்படும் எம்.ஆர்.ராதாவின் மகன் ராதாரவியும் திரையுலகில் சிறந்த கலைஞராகப் போற்றப்படுகிறார். மேடை நாடகங்கள் முதல் வில்லத்தனம் வரை தமிழ் சினிமாவில் அவர் செய்யாத கதாபாத்திரங்களே கிடையாது. பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியவர். திரையில் இவர் வந்தாலே மிரட்டும் குரலும், மேனரிஸமும் ஒரிஜினலாக இருக்கும். அப்படிப்பட்ட டத்தோ ராதாரவிக்கு அற்புதமாக அமைந்த ஓர் மெலடி சூப்பர்ஹிட் பாடல்தான் பூவே செம்பூவே உன் வாசம் வரும்.. பாடல்.

முதல்தடவை இந்தப் பாடலைப் பார்த்தவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் இவருக்கா இந்தப் பாடல் என்று ஆச்சர்யப்பட்டுப் போவார்கள். மொத்த வில்லனிஸத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு அப்படியே ஹீரோவாக மாறி புன்சிரிப்புடன் பாடல் முழுக்க மெல்லிய நடனம் மற்றும் நடிப்பில் அசத்தியிருப்பார் ராதாரவி. இந்தப் பாடல் இவருக்கு எப்படி அமைந்தது தெரியுமா?

பழம்பெரும் இயக்குநர் பீம்சிங் மகனும், தமிழ் சினிமாவின் சிறந்த எடிட்டர்களில் ஒருவருமான பி.லெனின் இயக்குநராகவும் சில படங்களை இயக்கியிருக்கிறார். அப்படி இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் சொல்லத் துடிக்குது மனசு.

1988-ல் கார்த்திக், பிரியா ஸ்ரீ, ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படத்தில் ராதாரவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இளையராஜா இசையில் உருவான இப்படத்தில் இடம்பெற்ற பூவே செம்பூவே பாடல் யாருக்கு வைப்பது என குழப்பமாக இருந்தது. ஆனால் அது கண்டிப்பாக ஹீரோ கார்த்திக்குக்கு கிடையாது.

25 டியூன் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்.. உருகிப் போன எஸ்.ஜே.சூர்யா.. உருவான சூப்பர்ஹிட் அம்மா பாடல்

எனவே ராதாரவி லெனினிடம் இந்தப் பாடலுக்கு யாரை நடிக்க வைக்கப் போகிறீர்கள் என்று கேட்க, அப்போது லெனின் நீங்களே நடித்து விடுங்கள் என்று கூற ராதாரவி இந்தப் பாடலில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவை நம்பியாருக்கு அடுத்து தனது வில்லத்தனத்தால் மிரட்டி வந்த ராதாரவிக்கு இந்தப் பாடல் பெரும் திருப்புமுனையைக் கொடுத்தது.

வானொலிகளிலும், கேசட்டுகளிலும், மேடைக் சச்சேரிகளிலும் இந்தப் பாடல் இடம்பெறாமல் இருந்ததில்லை. ராதாரவி மேல் இருந்த அத்தனை நெகடிவ் இமேஜையும் இந்தப் பாடல் உடைத்து அவரின் மற்றொரு முகத்தைக் காட்டியது என்றே சொல்லலாம். அதற்கு முழுக் காரணம் கே.ஜே.யேசுதாஸ் மற்றும் இளையாராஜா.

இந்தப் பாடலின் மற்றொரு வெர்ஷனில் பெண் குரலில் சுனந்தா பாடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...