அன்பையும் மனிதநேயத்தையும் பேசும் டூரிஸ்ட் ஃபேமிலி – திரை விமர்சனம்!

Tourist family review: அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி சசிக்குமார், சிம்ரன், யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்து இன்று வெளியாகியுள்ள ஃபேமிலி டூரிஸ்ட் படம் பற்றி பார்ப்போம். கதை: இலங்கையில்…

Tourist family review: அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி சசிக்குமார், சிம்ரன், யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்து இன்று வெளியாகியுள்ள ஃபேமிலி டூரிஸ்ட் படம் பற்றி பார்ப்போம்.

கதை: இலங்கையில் வசிக்கும் ஒரு குடும்பம் பொருளாதார பிரச்சனையில் சிக்கி அங்கிருந்து படக்குழு வழியாக ராமேஸ்வரம் வருகிறார்கள். அதன்பின் சென்னை வந்து ஒரு புதிய வாழ்க்கை ஆசைப்பட காவல்துறை அவர்களை அனுமதித்தார்களா?. சட்டம் அவர்களை அனுமதிக்கிறதா என்பதை நகைச்சுவை மற்றும் எமோஷனல் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

மற்ற நாட்டிலிருந்து வருபவர்களை அகதி என சாதாரணமாக சொல்லிவிடுகிறோம். ஆனால், ஏதேனும் ஒரு ஊரில் நமக்கு நிம்மதியான ஒரு வாழ்க்கை கிடைக்காதா என்கிற ஏக்கத்துடன் அலையும் அவர்களை பற்றி ஒரு கதை எழுதியதற்கே இயக்குனர் அபிஷன் ஜீவிந்தை பாராட்டலாம். அதுவும் முதல் படமாக இப்படி ஒரு கதையை யாரும் யோசித்திருக்க மாட்டார்கள். எடுத்துக்கொண்ட கதையில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

tourist family

கதையின் தன்மையை புரிந்துகொண்டு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் சசிக்குமார். 20 வயதில் ஒரு மகன் என்கிற அப்பா கதாபாத்திரத்தை துணிச்சலும் ஏற்று நடித்திருக்கிறார். நிம்மதியான வாழ்க்கை கிடைத்துவிடாதா என கண்களில் தவிப்பு, போலீசாரிடம் மாட்டிகொள்வோமா என்கிற பயம், சக மனிதர்களிடம் காட்டும் அன்பு என அசர வைக்கிறார். அழவும் வைக்கிறார். அதேபோல், சிம்ரனும் அற்புதமான் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சசிக்குமார் – சிம்ரன் தம்பதிக்கு மகனாக வரும் இரு சிறுவர்களுமே சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கான காட்சிகளை மிகவும் சுவாரஸ்யமாகவே எழுதியிருக்கிறார் இயக்குனர் அபிஷன்.

சிம்ரனின் அண்ணனாகவும், அந்த குடும்பத்திற்கு உதவுபவராகவும் முக்கிய வேடத்தில் யோகிபாபு வந்து சிரிக்க வைக்கிறார். அதேபோல், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் என எல்லோரும் தங்களின் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். படத்தில் நிறைய இருந்தாலும் சில குறைகளும் இருக்கிறது. எந்த ஆவணமும் இல்லாமல் தங்களின் பகுதிக்கு வரும் சசிக்குமார் குடும்பத்தை அங்கு வசிக்கும் மக்களும், போலீஸ் அதிகாரிகளும் எப்படி சாதாரணமாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்கிற கேள்வி படம் முழுக்க நமக்கு எழுகிறது. ஆனாலும், லாஜிக் ஓட்டைகளை எமோஷனல் காட்சிகள் மறைத்துவிடுகிறது.

tourist family
tourist family

அகதிகளை மனிதநேயம் இல்லாமல் எல்லா மாநிலங்களும் நடத்துவதாக பல வருடங்களாக புகார் இருக்கும் நிலையில் இப்படி ஒரு கதையை படமாக்க நினைத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். சட்டங்கள், கட்டுப்பாடுகளை தாண்டி அன்பும், மனித நேயமுமே முக்கியம் என பேசும் டூரிஸ்ட் ஃபேமிலி படம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.