ஒரு நடிகனாக எனக்கு கிடைத்த சிறந்த கதைக்களம் இந்தப்படம் தான்… நடிகர் சூரி பகிர்வு…

Published:

மதுரையில் பிறந்து வளர்ந்தவர் நடிகர் சூரி. இவரது இயற்பெயர் ராமலக்ஷ்மணன் முத்துசாமி என்பதாகும். சினிமாவில் நுழைந்து நடிகராக வேண்டும் என்று ஆர்வத்தில் 1996 ஆம் ஆண்டு மதுரையிலிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தார். சூரி சரிவர நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் பல இன்னல்களை அனுபவித்தார்.

சினிமாவில் சரியாக வாய்ப்பேதும் கிடைக்காததால் வருமானத்திற்கு துப்புரவு பணியாளராக, ஹோட்டலில் டேபிள் துடைப்பவராக என பல வேலைகளை செய்து வந்துள்ளார் சூரி. 1998 ஆம் ஆண்டு முதல் சிறு வேடங்களில், பின்னணியில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார் சூரி. இது தவிர சின்னத்திரை தொடர்களிலும் தோன்றியுள்ளார் நடிகர் சூரி.

2009 ஆம் ஆண்டு ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் திருப்புமுனையை பெற்றார் சூரி. அப்படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டது மிகவும் பிரபலமானது. இதனால் இவர் பரோட்டா சூரி என்றே அழைக்கப்பட்டார். அதற்கு பிறகு 2012 ஆம் ஆண்டு சசிகுமாரின் ‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தில் முக்கியமான துணை நகைச்சுவை நடிகர் வேடத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘பாண்டியநாடு’, ‘ஜில்லா’, ‘ரஜினி முருகன்’, ‘இது நம்ம ஆளு’, ‘வேலையில் வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘சீம ராஜா’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘சங்கத்தமிழன்’ போன்ற வெற்றி படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நடிகர் சூரி.

2023 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய விடுதலை பாகம் ஒன்று திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான சூரி அமோக வரவேற்பை பெற்றார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. விடுதலை பாகம் 2 விரைவில் வெளிவர இருக்கின்றது. கடின உழைப்பினால் நீண்ட முயற்சிக்கு பின்னால் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்த நடிகர் சூரி தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியான கருடன் திரைப்படமும் வெற்றி படமானது. இன்று சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சூரி நடித்த ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூரி நடிகனாக தன்னுடைய பயணத்தை பற்றி பேசி உள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால், ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இருந்து காமெடியனாக மாறி இன்று நடிகராக மாறி இருக்கிறேன் என்றால் அதற்கு மக்களும் ரசிகர்களும் தான் காரணம். ஒரு நடிகனாக எனக்கு மிகவும் பிடித்த சிறந்த கதைகளம் என்னவென்றால் அது கொட்டுக்காளி திரைப்படம் தான். இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்று பேசியுள்ளார் நடிகர் சூரி.

மேலும் உங்களுக்காக...