அதிரடி இசை இல்லை.. பஞ்ச் வசனம் இல்லை.. பாடல்கள் இல்லை.. வெளியான கொட்டுக்காளி டிரைலர்

By John A

Published:

ஒரு திரைப்படம் வெளியாகும் முன்பு டிரைலர் என்பது அந்தத் திரைப்படத்தின் முக்கிய வசனங்கள், சண்டைக் காட்சிகள், மாஸ் சீன்கள், பாடல்கள் என எல்லாவற்றையும் கலந்து ஒரு 2 நிமிடத்தில் பரபரப்பாக அந்தப் படத்தினைப் பார்க்க தூண்ட வைப்பார்கள். ஆனால் இதற்கு நேர்மாறாக எந்த ஒரு பரபரப்பு, பின்னனி இசை, பாடல்கள், வசனங்கள் என எதுவுமே இல்லாமல் வெறும் சேவல் கூவும் சப்தத்தை மட்டுமே டிரைலர் முழுக்க வைத்து கொட்டுக்காளி டிரைலரை உருவாக்கியிருக்கிறார்கள்.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சூரி நடிப்பில், வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் கொட்டுக்காளி. விடுதலை, கருடன் படங்களுக்குப் பிறகு சூரியின் மார்க்கெட் தற்போது எகிறியிருக்கிறது. விடுதலை படத்தில் அப்பாவி போலீஸாக நடித்தவர், கருடனில் ஆக்ரோஷ சொக்கனாக மிரட்டினார். கருடன் பட வெற்றிக்குப் பிறகு சூரி கதாநாயகனாக நடித்து அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் தான் கொட்டுக்காளி.

ஒரே நடிகை.. ஒரே படம்.. ஆனால் 5 மொழிகள்.. ஒவ்வொரு படத்துக்கும் எகிறிய சம்பளம்..

படத்தின் டிரைலர் லைவ் மியூசிக் போன்று உள்ளது. எந்தப் பின்னனி இசையும் இல்லாமல் இயற்கையான சப்தங்களையும், யதார்த்தமான மனிதர்களையும், ஒரு சினிமா போன்று இல்லாமல் அக்கம் பக்கத்தில் நடக்கும் சம்பவங்களைப் போன்றே இயக்குநர் வினோத்ராஜ் பதிவு செய்திருக்கிறார். ஒரே ஒரு காட்சியில் சூரி பேசும் வசனம் வித்தியாசமான குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்க வீட்டுப் பிள்ளைக்கு பேய் பிடிச்சிருக்கு..விரட்டுறதுக்காக பாலமேடு பேறோம் என யதார்த்தமாக அவர் கூறுவது கிராமத்து வெள்ளந்தி மனிதர்களை ஞாபகப்படுத்துகிறது.

ஏற்கனவே விஜய்சேதுபதி தயாரிப்பில் வெளிவந்த கடைசி விவசாயி, மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற படங்களைப் பார்த்தவர்களுக்கு கொட்டுக்காளி படமும் அதே பாணியில் எடுக்கப்பட்டது போல் தோன்றும். ஏனெனில் மிகைப்படுத்தப்படாத காட்சிகள், கதாபாத்திரத் தேர்வு, காட்சி நடக்கும் சூழல் போன்றவை அந்த ஊருக்குள்ளேயே நம்மை அழைத்துச் செல்கிறது.

விஜய் சேதுபதியைப் போலவே சிவகார்த்திகேயனும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், புதிய இயக்குநர்களின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக கொட்டுக்காளி படத்தினை தயாரித்திருக்கிறார். வருகிற ஆகஸ்ட் 23 அன்று கொட்டுக்காளி திரைக்கு வருகிறது. மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்குபெற்று வெற்றிவாகையும் சூடியிதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...