தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடகி.. நாயகியை விட பாடகியாக பெயர் எடுத்த காரணம்!!..

Published:

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பாடத் தெரிந்தால் மட்டுமே நடிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். பாட்டு பாட தெரியவில்லை என்றால் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்காது. அதன் பிறகு தான் பின்னணி பாடகிகள் சில ஆண்டுகள் கழித்து வந்தார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதல் பின்னணி பாடகி என்ற பெருமையை பெற்றவர் யார் என்பது பற்றி தற்போது காணலாம்.

டி.கே பட்டம்மாள் உள்பட பல நடிகைகள் பாட்டு பாடியே திரை உலகில் பிரபலமான நிலையில் ஒரு கட்டத்தில் பின்னணி பாடகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர். அப்படி தான் நடிகை பி.ஏ. பெரிய நாயகி தனது இனிமையான குரலில் மெச்சத்தக்க இனிமையான பாடல்களை பாடக்கூடிய திறமை மூலம் பின்னணி பாடகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.

கர்நாடக சங்கீத பாடகியாக இருந்த அவர் சங்கீத ஆசிரியையாகவும் மாறினார். இலங்கைக்கு சென்ற அவர் அங்கேயே சில ஆண்டுகள் குடும்பத்துடன் தங்கி இருந்தார். அங்கு பாட்டு பயிற்சி பள்ளி நடத்தி வந்த பிஏ பெரிய நாயகி, திருமணமாகி 3 குழந்தைகளுடனும் வாழ்ந்து வர, அவரது பாடல்கள் தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதையடுத்து சென்னைக்கு திரையுலகினர்களால் அழைத்து வரப்பட்டார்.

srivalli

சென்னை திருவல்லிக்கேணியில் குடியேறிய அவருக்கு ஏராளமான பாடல்கள் பாடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. முதன்முதலாக அவர் சிவி ராமன் இயக்கத்தில் உருவான ’விக்ரம ஊர்வசி’ என்ற படத்தில் நடிக்கவும் பாடவும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அவர் ஒரு சிறிய வேடத்தில் நடித்தாலும் அதில் அவர் பாடிய ஒரு பாடல் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது.

இதன் பிறகு அவர் பல படங்களில் நடிக்கவும், பாடவும் செய்தார். அதில் பாட்டு பாடுவதில் அவர் கூடுதல் கவனம் செலுத்தினார். இந்த நிலையில் தான் ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தை ஏவிஎம் தயாரித்த நிலையில் அந்த படத்தில் டி ஆர் மகாலிங்கம் மற்றும் குமார் ருக்மணி நடித்திருந்தனர். இந்த படம் வெளியான போது குமாரி ருக்மணி பாடிய பாடல்கள் ஏவி மெய்யப்பனுக்கு திருப்தியாக இல்லை.

இதனையடுத்து அவர் உடனடியாக பெரிய நாயகியை அழைத்து ருக்மணி பாடிய அனைத்து பாடல்களையும் அவரை வைத்து பாட வைத்தார். அதன் பிறகு அவசர அவசரமாக பெரியநாயகி பாடிய பாடல்கள் படத்தில் சேர்க்கப்பட்டு அனைத்து திரையரங்கங்களுக்கும் புதிய பிரிண்டுகள் அனுப்பப்பட்டது. அதன் பிறகு தான் ஸ்ரீ வள்ளி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தொடர்ந்து ஒரு கட்டத்தில் அவர் நடிப்பதை நிறுத்திவிட்டு முழு நேர பின்னணி பாடகியாக மாறினார். இன்றும் பெரிய நாயகியின் பாடல்களை கேட்டால் மனதை சொக்க வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...