3 மனைவிகள், 7 குழந்தைகள்.. ரீமேக் உரிமை கொடுக்க மறுத்த ஸ்ரீதர்.. நடிகர் டிஎஸ் பாலையாவின் அறியப்படாத பக்கம்..!

Published:

இன்றைய திரையுலகில் பல நடிகர்கள் வில்லனாக அறிமுகமாகி அதன் பின் ஹீரோவாக நடித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். ரஜினிகாந்த், சத்யராஜ் உள்பட பலர் அந்த பட்டியலில் இருக்கிறார்கள். ஆனால் முதன் முதலில் தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி அதன் பின் ஹீரோவாக நடித்து பின்னர் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்தவர் என்றால் அவர்தான் டி.எஸ்.பாலையா.

எம்.ஜி.ஆர் நடித்த முதல் படம் எது என்று கேட்டால் கிட்டத்தட்ட அனைவரும் ‘சதி லீலாவதி’ என்று சரியான பதிலை கூறி விடுவார்கள். இந்த படத்தில் தான் டி.எஸ்.பாலையாவும் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணனும் அறிமுகமானார்கள். டி.எஸ்.பாலையா வில்லனாக நடித்திருப்பார்.

T S Balaiah 4

வில்லன், குணச்சித்திர மற்றும் காமெடி வேடங்களில் நடித்த டி.எஸ்.பாலையா ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர் நடிக்கும் ‘மீரா’ என்ற படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது. அந்த நேரத்தில் டி.எஸ்.பாலையா கொல்கத்தாவில் இருந்ததால் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க சென்றார்.

அப்போது அந்த படத்தின் இயக்குனர் டி.எஸ்.பாலையாவை பார்த்தவுடன் எம்.ஜி.ஆரை அந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டு டி.எஸ்.பாலையாவுக்கு அந்த கேரக்டரை நடிக்க கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு ஒரு சிறு கேரக்டர் மட்டும் அந்த படத்தில் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் எம்ஜிஆர் வருத்தம் அடைந்தாலும் பின்னாளில் அவர் தனது சுயசரிதையில் ‘ஒருவேளை நான் அந்த கேரக்டரில் நடித்திருந்தால் கூட இந்த அளவுக்கு என்னால் சிறப்பாக நடித்திருக்க முடியாது, பாலையா மிகவும் சிறப்பாக நடித்தார்’ என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த அளவுக்கு எம்ஜிஆரால் பாராட்டப்பட்ட நடிகர் தான் டி.எஸ்.பாலையா.

T S Balaiah 3

அதேபோல் சிவாஜிக்கு இணையாக ஒரு நடிகர் இல்லை என்று தான் அனைவரும் கூறுவார்கள். ஆனால் சிவாஜியே டி.எஸ்.பாலையா நடிப்பை பார்த்து பயந்தவர் என்றால் அது தான் உண்மை. கொஞ்சம் அசந்தாலும் அவர் நம்மை தூக்கி சாப்பிட்டு விடுவார் என்று சிவாஜியை பலமுறை இயக்குநர்களிடம் கூறி இருக்கிறார்.

குறிப்பாக, ‘ஊட்டி வரை உறவு’, ‘திருவிளையாடல்’, ‘பாகப்பிரிவினை’ ஆகிய படங்களில் சிவாஜிக்கு இணையாக அவர் நடித்திருப்பார். அதேபோல் தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் சிவாஜியை தூக்கி சாப்பிடும் அளவுக்கு அவரது நடிப்பு இருக்கும்.

எனக்கு ஒரு பீடா கடைக்காரனை தெரியும் என்று சிவாஜி கூறிய போது அடுத்த நொடியே எனக்கு ஒரு சோடா கடைக்காரனை தெரியும் என்று டி.எஸ்.பாலையா கூறும் காமெடி காட்சி இன்றுவரை ரசிக்கத்தக்க அளவில் இருக்கும்.

T S Balaiah 2

இந்த நிலையில்தான் சீரியஸான படங்களை இயக்கிக் கொண்டிருந்த இயக்குனர் ஸ்ரீதர் முழுக்க முழுக்க ஒரு காமெடி படத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து ‘காதலிக்க நேரமில்லை’ என்ற பாடத்தை இயக்க முடிவு செய்தார். அந்த படத்தில் டி.எஸ்.பாலையாவுக்கு தான் முக்கிய வேடம். அந்த படத்தின் நாயகன்களாக முத்துராமன் மற்றும் ரவிச்சந்திரனும், நாகேஷ் முக்கிய கேரக்டரிலும் நடித்திருந்தாலும் அந்த படத்தின் டைட்டிலில் முதலில் டி.எஸ்.பாலையா பெயர்தான் வரும்.

பின்னாளில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை ரீமேக் செய்ய இயக்குனர் மனோபாலா, ஸ்ரீதரிடம் சென்று உரிமையை கேட்டபோது எந்தெந்த கேரக்டருக்கு யார் யாரை தேர்வு செய்திருக்கிறீர்கள் என்று கேட்டார். அவரும் ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ் போன்ற கேரக்டருக்கு இந்தந்த நடிகரை தேர்வு செய்ததாக கூற, பாலையா கேரக்டருக்கு அவர் அளவுக்கு நடிக்க கூடிய நடிகர் யார் இருக்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு மனோபாலாவிடம் பதில் இல்லை. பாலையா அளவுக்கு நடிக்கக்கூடிய ஒரு நடிகரை தேர்வு செய்துவிட்டு வந்தால் உனக்கு அந்த படத்தின் ரீமேக் உரிமையை தருகிறேன், இல்லாவிட்டால் தரமாட்டேன் என்று கூற, அந்த படத்தை ரீமேக் செய்வது கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அதேபோல் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ‘பாமா விஜயம்’ என்ற திரைப்படத்தில் மூன்று மகன்களையும் மருமகள்களையும் கவனிக்கிற முக்கியமான கேரக்டரில் டி.எஸ்.பாலையா நடித்திருப்பார். வரவு எட்டணா செலவு பத்தணா என்ற பாடலில் அவரது பாடி லாங்குவேஜ் அசாத்தியமானது.

T S Balaiah 1

நடிகர் பாலையா அடுத்தடுத்து மூன்று திருமணங்கள் செய்து கொண்டதாகவும் 3 மனைவிகளுக்கும் சேர்ந்து மொத்தம் ஏழு குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் அவர் திருமண வாழ்க்கையை வெறுத்து சாமியாராக போகப்போவதாக கூறியதாகவும் அதன் பின் திடீரென தலைமறைவானதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில்தான் மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் டி.ஆர்.சுந்தரம் தற்செயலாக அவரை கண்டுபிடித்து மீண்டும் அழைத்து வந்து அவரை படங்களில் நடிக்க வைத்ததாகவும் கூறப்படுவதுண்டு.

1972ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர் காலமான நிலையில், அவர் காலமாகி கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாகியும் இன்னும் ரசிகர்கள் மறக்காமல் இருப்பது தான் அவரது உண்மையான வெற்றி. சிவாஜி கணேசன் உள்பட எந்த ஒரு நடிகருக்கும் மாற்று நடிகர் உண்டு, ஆனால் பாலையா இடத்தை பிடிப்பதற்கு இன்று வரை ஒரு மாற்று நடிகர் இல்லை என்பது தான் அவரது ஸ்பெஷல்.

மேலும் உங்களுக்காக...