தமிழ்த்திரை உலகின் தவப்புதல்வன் யார் என்றால் அது செவாலியே சிவாஜி தான். நடிகர் திலகம் என்று அவரை சும்மா அழைத்துவிடவில்லை. எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் சரி. தனது நடிப்புக்குத் தீனி போட்டுக்கொண்டே இருப்பார். எளிதில் அவர் நடிப்பது போல தான் இருக்கும்.
ஆனால் அதில் அவர் காட்டும் மேனரிசங்களோ ஆயிரம் ஆயிரமாக இருக்கும். தனக்கு என்று இந்த கதாபாத்திரம் தான் பொருத்தமாக இருக்கும். அதில் தான் நான் நடிப்பேன் என்று இவருக்கு எந்த வரையறையும் கிடையாது. நடிக்க வந்து விட்டால் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அசால்டாக நடித்து விடுவார்.
நாட்டுக்கு உதவும் நல்ல ராஜாவாகவும் நடிப்பார். வெள்ளையனை எதிர்க்கும் வீரபாண்டிய கட்டபொம்மனாகவும் வந்து கலக்குவார். வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்… என்று மகாகவி பாரதியாகவும் வருவார். நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வில்வித்தை காட்டும் வீரனான கர்ணனாகவும் வருவார்.
ஒரே மாதிரியான கேரக்டர்களாக படங்களில் வரும் போது ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட வித்தியாசத்தைக் காட்டி அசத்துவார். உதாரணமாக பாகப்பிரிவினை, பட்டிக்காடா பட்டணமா படங்களை எடுத்துக் கொள்வோம். இரண்டிலுமே கிராமத்தான் தான் சிவாஜி. ஆனால் நடிப்பு முற்றிலும் மாறுபட்டவை. அதற்கு அவர் காட்டும் மேனரிசங்கள் தான் காரணம்.
ராஜா, தங்கப்பதக்கம் படங்களில் சிவாஜி போலீஸ் அதிகாரி தான். ஆனால் அவர் காட்டும் மிடுக்கு, தோரணையைப் பாருங்கள். அப்பப்பா… இப்படி ஒரு நடிகரா? என்ன ஒரு நடிப்பு என்று நம்மை ஆச்சரியப்படுத்துவார்.
அதே போல் சரஸ்வதி சபதம், திருவிளையாடல், திருவருட்செல்வர் படங்கள் யாவும் பக்திமயம் தான். ஆனால் அவர் காட்டும் நடிப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலக அதிசயமாகவே இருக்கும்.
பலே பாண்டியா, பாலும் பழமும் படங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டிலுமே விஞ்ஞானி கெட்டப் தான். ஆனால் சிவாஜியின் ஆளுமை கேரக்டரை மெருகூட்டும் அல்லவா. நாம் படம் பார்க்கும் போது நம்மையும் அறியாமல் நம் கண்களில் இருந்து நீர் வழியும். அது ஆனந்தக் கண்ணீராகவும், அழுகையின் கண்ணீராகவும் மாற வைப்பது நடிகர் திலகம் தான்.
இன்றைய நடிகர்களுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனம். எந்த ஒரு கேரக்டராக இருந்தாலும் சிவாஜி இதுபோன்ற கேரக்டர்களில் எப்படி நடித்துள்ளார் என்று புரட்டிப் பார்ப்பார்கள். அவர் ஒரு சினிமா அகராதி. இக்கால நடிகர்களுக்கு அவர் ஒரு உற்சாக டானிக். அவரது படங்களின் நடிப்பை நடித்துப் பார்த்தாலே தேர்ந்த நடிகர்களாகி விடுவர்.