ஒரே ஒரு கொலையை கண்டுபிடிக்க இத்தனை நாடகமா? திரையுலகம் வியந்து பார்த்த ‘புதிய பறவை’..!

By Bala Siva

Published:

தமிழ் திரை உலகில் கொலையை கண்டுபிடிக்கும் துப்பறியும் கதைகள் பல வந்திருந்தாலும் ‘புதிய பறவை’ போன்ற ஒரு திரைப்படம் இன்று வரை வரவில்லை என்பது தான் இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பு.

இந்த படத்தை முதல் முறை பார்ப்பவர்கள் கிளைமாக்ஸ் இதுவாகத்தான் இருக்கும் என்று கொஞ்சம் கூட யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. பிரபல பாலிவுட் இயக்குனர் தாதா மிராஸி இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

எம்ஜிஆர் ஃபார்முலா இல்லாத ஒரே படம்.. ஏவிஎம் – எம்ஜிஆர் இணைந்த முதல் படம்.. ‘அன்பே வா’ வெற்றி பெற்றது எப்படி?

சிங்கப்பூர் மற்றும் ஊட்டியில் மிகப்பெரிய தொழில் அதிபராக சிவாஜி இருப்பார். அவர் சிங்கப்பூரிலிருந்து கப்பலில் வரும்போதுதான் தற்செயலாக சரோஜாதேவி மற்றும் அவரது தந்தை வி.கே.ராமசாமியை பார்ப்பார்.

puthiya paravai

இருவரும் அறிமுகமாகி அதன் பின்னர் சிவாஜியின் வீட்டிலேயே தங்குவார்கள். இந்த நிலையில் சிவாஜியையும் சரோஜாதேவியையும் இணைத்து மொட்டை கடிதங்கள் வெளியாகும். ஆனால் அதை இருவருமே பொருட்படுத்த மாட்டார்கள்.

இந்த நிலையில் இருவருக்கும் சில நாள் கழித்து நட்பு ஏற்பட்டு அதன் பிறகு காதலாக மாறும். ஆனால் சிவாஜி கணேசன் காரில் செல்லும் போது ரயில்வே கேட்டில் கார் நின்றால் மட்டும் அவருக்கு படபடப்பு ஏற்பட்டுவிடும். என்ன ஆயிற்று என்று சரோஜா தேவி கேட்க ஏதேதோ காரணம் சொல்லி சமாளிப்பார்.

இந்த நிலையில்தான் அடுத்தடுத்து ரயில்வே கேட்டில் படபடப்பு வந்த நிலையில், சரோஜாதேவியிடம் ரயில்வே கேட்டில் படபடப்பு ஏன் ஏற்படுகிறது என்ற காரணத்தை சிவாஜி சொல்லுவார்.

சிங்கப்பூரில் இருக்கும்போது இரவு விடுதியில் சௌகார் ஜானகியை பார்த்ததாகவும், தாயை இழந்து தவித்துவந்த அந்த பெண்ணின் மீது முதலில் இரக்கம் ஏற்பட்டு, அதன் பின் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டதாக கூறுவார். ஆனால் முதலிரவு அன்று சௌகார் ஜானகி குடித்துவிட்டு வந்ததை பார்த்ததும் சிவாஜி அதிர்ச்சி அடைந்து விடுவார். இதனை அடுத்து இருவருக்கும் தகராறு ஏற்படும். அப்போது காரை எடுத்துக்கொண்டு சவுகார் ஜானகி வேகமாக சென்று ரயிலில் அடிபட்டு இறந்து விடுவார். அதனால்தான் எப்போது ரயிலை பார்த்தாலும் தனக்கு படபடப்பு ஏற்படும் என்று சரோஜாதேவியிடம் சிவாஜி கணேசன் கூறுவார்.

puthiya paravai4 1

இந்த நிலையில்தான் இருவருக்கும் திருமணம் நிச்சயமாகும். அப்போது திடீரென சௌகார் ஜானகி வந்து, ‘நான் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது நீங்கள் எப்படி திருமணம் செய்யலாம்’ என்று கேட்பார். ஆனால் இவர் தனது மனைவியே இல்லை என்று சரோஜாதேவியிடம் சிவாஜி நிரூபிக்க முயற்சி செய்வார். எல்லா ஆதாரங்களும் சிவாஜிக்கு எதிராகவே இருக்கும். கைரேகை கூட பொருத்தமாக இருப்பதை பார்த்து சிவாஜி அதிர்ச்சி அடைவார்.

இந்த நிலையில் தான் சௌகார் ஜானகியின் சகோதரர் சிங்கப்பூரில் இருந்து வந்திருப்பார். அவரிடம் உன் தங்கை இறந்து விட்டார் தானே? இவர்களுக்கு எல்லாம் புரிய வை என்று சொல்லும்போது, இல்லை இவர்தான் என் தங்கை என்று அவரும் சொன்ன பிறகு சிவாஜி அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று விடுவார்.

அதன் பிறகுதான் அவர் சரோஜாதேவியிடம் அன்றைக்கு நான் உன்னிடம் சொன்ன கதை பாதிதான், மீதி கதையை சொல்கிறேன் என்று கூறி செளகார் ஜானகியை தானே கொலை செய்ததாக கூறுவார். அப்போதுதான் திடீரென சரோஜாதேவி, ‘இன்ஸ்பெக்டர், வாக்குமூலத்தை பதிவு செய்து விட்டீர்கள் தானே, அவரை கைது செய்யுங்கள்’ என்று கூற சிவாஜி அதிர்ச்சி அடைவார்.

அதன் பிறகுதான் சரோஜாதேவி, அவருடைய தந்தை வி.கே.ராமசாமி, எம்.ஆர்.ராதா என அனைவருமே போலீஸ் என்பது தெரிய வரும். இது கொலைதான் என்று எங்களுக்கு நன்றாக தெரியும், ஆனால் இந்த கொலைக்கு உங்களுடைய வாக்குமூலம் தவிர எங்களுக்கு வேறு ஆதாரமே இல்லை, எனவே உங்கள் வாயிலிருந்து உண்மையை வரவழைக்க வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் எல்லோரும் நாடகம் ஆடினோம் என்று போலீஸ் அதிகாரி எம்.ஆர்.ராதா கூறுவார்.

முதலமைச்சர் எம்ஜிஆரிடம் அனுமதி வாங்கி சிவாஜி படம் எடுத்த தயாரிப்பாளர்… எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் ஏமாற்றம்..!

அப்போதுதான் சிவாஜி, ‘என்னிடமிருந்து உண்மையை வாங்க நீ எந்த வேடம் என்றாலும் போட்டு இருக்கலாம், ஆனால் காதல் என்ற புனிதமான வேடமா போட வேண்டும்’ என்று சரோஜாதேவியிடம் சொல்லும்போது ‘உங்களுக்காக நான் காத்திருப்பேன் கோபால்’ என்று சரோஜாதேவி கூறுவதுடன் இந்த படம் முடியும்.

puthiya paravai2 1

1964ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆனது. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேலாகியும் இந்த படம் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை ரீமேக் செய்ய ஒரு சில இயக்குனர்கள் முயன்றார்கள். ஆனால் சிவாஜி, சரோஜாதேவி அளவுக்கு நடிக்க இன்றைய நடிகர்கள் இல்லை என்பதால் அந்த முயற்சியை கைவிட்டதாக கூறப்பட்டது.

பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..

இந்த படத்திற்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்கள். பார்த்த ஞாபகம் இல்லையோ, எங்கே நிம்மதி, சிட்டுக்குருவி, ஆக மெல்ல நட, உன்னை ஒன்று கேட்பேன் ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியது. அனைத்து பாடல்களையும் டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் சுசீலா பாடியிருந்தனர்.