வில்லனாக நடித்த ரஜினிகாந்த் பைரவி என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தது போல் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்த சத்யராஜ் சாவி என்ற திரைப்படத்தின் மூலம் தான் நாயகனாக நடித்தார். ஆனால் அந்த படத்திலும் அவர் வில்லத்தனமான கேரக்டரில் தான் ஹீரோவாக நடித்திருப்பார்.
நடிகர் சத்யராஜ், கமல்ஹாசன் நடித்த ’சட்டம் என் கையில்’ என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அதன் பிறகு அவர் பல படங்களில் வில்லனுக்கு அடியாளாக நடித்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மெயின் வில்லனாக நடித்தார்.
ரஜினிகாந்த் நடித்த பாயும் புலி, சிவாஜி கணேசன் நடித்த சந்திப்பு உள்பட பல திரைப்படங்களில் அவர் வில்லனாக நடித்தார். இந்த நிலையில் தான் 1985 ஆம் ஆண்டு கார்த்திக் ரகுநாத் என்பவர் இயக்கத்தில் உருவான சாவி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார்.
என்னைப் போய் இப்படி ஆக்கிட்டாங்களே..? சத்யராஜ் வருத்தப்பட்ட கதாபாத்திரம்..!
இந்த படத்தில் சத்யராஜ் ஜோடியாக அன்றைய காலகட்டத்தில் ரஜினி, கமல் உள்பட பல பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த சரிதா நடித்தார். சத்யராஜ் மற்றும் சரிதா ஆகிய இருவரும் கணவன் மனைவியாக இருப்பார்கள். சரிதா மிகப்பெரிய பணக்கார பெண்ணாக இருப்பார். அவரை கொலை செய்துவிட்டால் அந்த பணம் முழுவதும் தனக்கு வந்து விடும் என்ற நினைக்கும் சத்யராஜ் அவரை கொலை செய்ய முயற்சி செய்வார்.
பக்காவாக திட்டம் போட்டு கொலையை செய்துவிட்ட பின்னர் தான் சரிதாவுக்கு பதிலாக வேறு ஒருவரை சத்யராஜ் கொலை செய்துவிட்டது தெரியவரும். இதனை அடுத்து காவல்துறை அதிகாரி ஜெய்சங்கர் இந்த வழக்கை விசாரிப்பார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் வரும்போது பல்வேறு திருப்பங்கள் அடைந்து உண்மையில் கொலை செய்யப்பட்டவர் யார்? ஏன் கொலை செய்யப்பட்டார் என்று தெரியவரும்.
கமல்ஹாசன் தயாரிப்பில் சத்யராஜ் ஹீரோ.. சூப்பர்ஹிட்டான ஆச்சரியம்..!
நீதிமன்ற காட்சிகளில் சத்யராஜ், சரிதா இருவருமே அபாரமாக நடித்திருப்பார்கள். காவல்துறை அதிகாரி கேரக்டரில் ஜெய்சங்கர் மிடுக்காக நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் சரிதாவின் நண்பராக நிழல்கள் ரவி மற்றும் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் சாவி ஒரு முக்கிய கேரக்டரில் இடம் பெறும். கதையின் திருப்பத்திற்கு அந்த சாவி தான் உதவியாக இருக்கும்.
இந்த படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார். மூன்றே மூன்று பாடல்கள் என்றாலும் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இந்த படம் சத்யராஜ் முதல் முதலாக ஹீரோவாக நடித்த படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் ஊடகங்கள் சத்யராஜ் ஹீரோவாக நடித்தாலும் இந்த படத்திலும் அவர் முழு நேர வில்லனாக நடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் என்றும் இந்த கேரக்டரை ஹீரோ கேரக்டர் என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் விமர்சனம் செய்தனர்.
ஆனால் அதன் பின்னர் வெளியான கடலோர கவிதைகள் என்ற படத்தில் தான் நிஜமாகவே சத்யராஜ் ஹீரோவாக நடித்தார் என்று ஊடகங்கள் விமர்சனம் செய்தன. சத்யராஜ் அதன் பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும் தமிழ் திரை உலகில் அவரை முதல் முதலாக ஹீரோவாக்கிய படம் என்றால் அது சாவி படம் என்பது குறிப்பிடத்தக்கது.