ஒரு ரூபாயாவது கொடுங்க; தமிழக அரசுக்கு ஆர்.கே.செல்வமணி அதிரடி கோரிக்கை!

Published:

திரையரங்குகளில் வரும் டிக்கெட்டில் 1 டிக்கெட்டுக்கு 1 ரூபாய் வீதம் பிடித்தம் செய்து மாத ஊதியமாக வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு பிரபல இயக்குநரும், பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன அலுவலகத்தில் பெப்சி தலைவரும், இயக்குநருமான ஆர்.கே செல்வமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழ் திரைப்பட துறையில் எங்களது கடைநிலை ஊழியர்கள் 1000 ரூபாய் சம்பளத்தை தொடுவதற்கு ஏறக்குறைய 100 ஆண்டுகள் ஆகிறது. இது தான் தற்போதைய நிலையாக இருக்கிறது.

திரைப்பட துறையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. சில பேர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழக்கின்றனர். இது ஒரு நாள் செய்தியாக வந்து மறுநாள் வருத்தம் தெரிவிப்பதுடன் மறந்து விடுகிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய எந்த வழிவகையும் இல்லாமல் இருக்கிறது.

சமீபத்தில் கூட இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகும் படத்தில் ஸ்டன்ட்மேன் ஒருவர் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதற்கு முன் லைட் மேன் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

பெரிய நடிகர்களின் படங்களில் தொழிலாளிகள் இறந்து விட்டால் அதிர்ஷ்ட வசமாக அவர்கள் குடும்பத்துக்கு உதவி கிடைக்கிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் சார் படங்களில், அதாவது இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து நடந்த போது 1 கோடி ரூபாய் நிதியுதவி கிடைத்தது. ஆனால் படமெடுக்க சிரமப்படும்/ சிறிய தயாரிப்பாளர்கள் படங்களில் விபத்து நடந்தால், மரணம் ஏற்பட்டால் உதவ முடியாத நிலையில் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.

எப்படி ஒரு தொழிலாளர்கள் இறந்தால் மத்திய மாநில அரசுகள் உதவி செய்கிறதோ அதே போல் திரைப்பட துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் விபத்து ஏற்பட்டாலோ அல்லது உயிரிழந்தாலோ அவர்களுக்கான மருத்துவ செலவுகள் , மருத்துவ வசதி அல்லது அந்த குடும்பத்துக்கான நிதியுதவியை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கையாக வைக்கிறேன்.

சிலருக்கு சில விஷயங்கள் முன்னுதாரணமாக அமைகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏ. ஆர் ரகுமான் ஸ்டுடியோவில் விபத்து ஏற்பட்டு லைட் மேன் இறந்து விட்டார். அந்த அதிர்ச்சியில் அவர் ஸ்டுடியோவை மூடி விட்டதாகவும், அந்த வலி அவரை நேரடியாக பாதித்தது. அதனால் அவரே எங்களை தொடர்பு கொண்டு, லைட் மேன் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பணிபுரியும் இடங்களில் விபத்து ஏற்பட்டு மரணமடைந்தால் அவர்களுக்கு உதவ கார்ப்பரேட் ஃபண்ட் ரெடி பண்ணுகிறேன் என்று சொன்னதாகவும் கூறினார்.

திரையரங்குகளில் வரும் டிக்கெட்டில் 1 டிக்கெட்டுக்கு 1 ரூபாய் வீதம் பிடித்தம் செய்து அதை நிதி ஆதாரமாக கொண்டு திரைப்பட தொழிலாளர்களுக்கு 60 வயதை கடந்த பிறகு மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை மாநில அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறோம் என்றும், அரசாங்கம் நிறைய உதவிகள் செய்தாலும் பல நேரங்களில் அது முறையாக தொழிலாளிகளை வந்து சேர்வதில்லை.

எங்களுக்கு மருத்துவமனை வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம் எனவும், வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எங்கள் திரைப்பட தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவி செய்வது மாதிரியான
திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...